“அம்மாவின் மரியாதைக்காக ஆயிரம் வேலைகளையும் இழப்பேன்” – கங்கனாவை அறைந்த பெண் பொலிஸ்!

பொலிஸ் விமான நிலையத்தில் நடிகை கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர், தனது தாயின் மரியாதைக்காக 1000 வேலைகளையும் இழக்க தயார் என தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலின் மண்டி தொகுதியில் போட்டியிட்டார். பாஜக சார்பில் களம் கண்ட கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார்.
சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்த கங்கனா ரனாவத்தை, பணியில் இருந்த பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்தார்.
தனது தாய் உட்பட அனைவரையும் விவசாய சட்டத்திற்கு எதிராக போராடியபோது, கங்கனா ரனாவத் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குல்விந்தர் கவுர் விசாரணையில் கூறினார்.
இதனைத் தொடர்ந்து குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குல்விந்தர் கவுர் தனது எக்ஸ் பக்கத்தில், ”என் அம்மாவின் மரியாதைக்காக 1000 வேலைகளையும் இழக்க தயார். இழந்த வேலையை நினைத்து நான் பயப்படப்போவதில்லை” என தெரிவித்துள்ளார்.