உறங்கும்போது.. இவையெல்லாம் ”கனவில் வந்தால் பலிக்குமா”..கனவு கண்டால் என்ன பலன்கள்..
ஆழ்ந்து தூங்கும் போது நம்மை மறந்து கனவு காண்கிறோம். அதில் பல கனவுகள் நம் விழிக்கும் பொழுது மறந்து போய்விடும். சில கனவுகள் மட்டும் நம் நினைவில் அப்படியே பதிந்திருக்கும். இன்னும் சில ஞாபகம் வரும் ஆனால் என்னவென்றே நம்மால் யூகிக்க முடியாத அளவிற்கு குழப்பமாக இருக்கும். இவ்வாறு நாம் காணும் கனவுகளுக்கு அர்த்தங்கள் இருக்கிறதா? என்று யோசிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். இவையெல்லாம் பலிக்குமா? அல்லது வெறும் பிரம்மையா? என்ற கேள்விக்குறியுடன் கனவுகளை நாம் நோக்கி கொண்டிருக்கிறோம். கனவுகள் ஏன் வருகிறது? கனவு கண்டால் என்ன பலன்கள் நமக்கு கிடைக்கும் என்று இப்பதிவில் விரிவாக காண்போம் வாருங்கள்.
கனவில் மீன் அல்லது ஆலயம் வருவது போல் கனவு கண்டால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படப்போகிறது என்று அர்த்தம். ஆந்தை வருவது போல் கனவு கண்டால் லக்ஷ்மி தேவியின் அருள் இருப்பதாகவும் உங்களின் பணப் பிரச்சனை தீரும் என்றும் அர்த்தம். தாமரைப்பூ அல்லது தேங்காய் பற்றிய கனவு வந்தால் சந்தோஷமான செய்திகள் வரப்போவதாக அர்த்தம். யானை வருவது போல் கனவு கண்டால் விநாயகரின் பரிபூரண அருள் உங்களுக்கு இருப்பதாக அர்த்தம். அதுவே யானை விரட்டுவது போல் நீங்கள் கனவு கண்டால் விநாயகருக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை செய்வது நல்லது. வெள்ளை பசு கனவில் வந்தால் நல்ல சகுனம் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம். காலை விழித்ததும் சங்கு அல்லது மணியோசை சத்தம் கேட்டால் நற்செய்தி கூடியவிரைவில் இல்லம் தேடி வரும் என்று அர்த்தம். புலி போன்ற இன்ன பிற மிருகங்கள் கனவில் வந்தால் நாம் எப்போதோ வேண்டிக் கொண்ட வேண்டுதல்களை நிறைவேற்றாமல் இருக்கிறோம் அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதை உணர்த்துவதாக அர்த்தம். பாம்பு கனவில் வந்தால் கெட்ட சகுணம் என்று கூறுகிறார்கள் ஆனால் அது சரியான தகவல் அல்ல. பாம்பு கனவில் வருவதால் நல்லது தான் நடக்கும். அதனால் பயப்பட தேவையில்லை. மல்லி பூ கனவில் வந்தால் நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பதை உணர்த்துவதாக அர்த்தம். கரும்பு அல்லது கரும்பு காடு இவை கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையே வேறு கோணத்தில் மாறப் போவதாக அர்த்தம். மாடு விரட்டுவது போல் அல்லது முட்டுவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் இருப்பவர்கள் எவருக்கேனும் விபத்து ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாக உணர்த்துகிறது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தெய்வ வழிபாடு பலன் தரும்.
கனவு வந்தபின் நாம் விழிக்கும் பொழுது இடது புறத்தில் படுத்திருந்தால் நம் முன்னோர்கள் நமக்கு குறிப்பால் எதையோ உணர்த்த பார்க்கிறார்கள் என்று பொருள்படும். வலதுபுறத்தில் படுத்திருந்தால் நமது குலதெய்வம் அல்லது நாம் வணங்கும் இஷ்ட தெய்வம் நமக்கு குறிப்பால் உணர்த்த இருப்பதாக பொருள்படும். இவை இரண்டும் அல்லாமல் குப்புறப் படுத்திருந்தால் பூர்வ ஜென்மத்தில் நடந்த சம்பவங்களை நம் ஆன்மா நமக்கு நினைவுபடுத்துவதாக அர்த்தம். பூர்வ ஜென்மத்தில் அல்லது இந்த ஜென்மத்தில் நல்ல எண்ணங்களை, செயல்களை செய்தால் மட்டுமே நமக்கு நல்லது நடக்கும். நல்ல கனவுகள் வரும். நாம் அறியாமல் செய்யும் தவறுகளுக்கு அதற்குரிய பரிகாரங்களை செய்து மன நிம்மதியுடன் வாழ்வது சிறப்பான வாழ்க்கைக்கு சிறந்த வழி.