ஒடிசா ரெயில் விபத்து: 233 பேர் பலி – விபத்து நடந்தது எப்படி?

June 3, 2023 at 3:20 pm
pc

மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12864) இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்துகொண்டிருந்தது.

அதேபோல், பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்றுகொண்டிருந்தது. பெங்களூரு-ஹவுரா ரெயில் நேற்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட ரெயிலின் சில பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன. 

அப்போது, அந்த தண்டவாளத்தில் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனால், தடம்புரண்ட பெங்களூரு-ஹவுரா ரெயில் பெட்டிகள் மீது சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன. 

அப்போது, அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் விபத்துக்குள்ளான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த கோர விபத்தில் மொத்தம் 233 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த உடன் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேற்று இரவு 7 மணிக்கு விபத்து நடைபெற்ற நிலையில் தொடர்ந்து இன்றும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 233 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய ரெயில்வேத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார். அதேவேளை, ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்குள்ளான நிலையில் இந்த ரெயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் பலர் பயணித்துள்ளதால் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும், விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து ரெயில்வே அமைச்சகம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 233 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website