கணவன் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் புதுப்பெண் தற்கொலை!

May 10, 2022 at 2:27 pm
pc

கடலூரில் கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வந்த பெண்ணிற்கு கழிவறை வசதி இல்லாததால் ஏற்பட்ட விபரீதம்

ஒரே மாதத்தில் முடிந்த வாழ்க்கை

கடலூர் அடுத்த அரிசி பெரியாங்குப்பத்தை சேர்ந்த இளம்பெண் ரம்யா (27). எம்.எஸ்சி பட்டதாரியான இவர் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ரம்யாவும் கடலூர் புதுநகரை சேர்ந்த கார்த்திகேயன் என்ற வாலிபரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

புகுந்த வீட்டுக்கு வந்ததும் அதிர்ச்சி

காதல் கணவனை மணந்து புகுந்த வீட்டுக்கு வந்த பின்னர்தான் காதல் கணவனின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்பது ரம்யாவுக்கு தெரியவந்தது. அப்போதைக்கு ரம்யாவை சமாதனம் செய்த கார்த்திகேயன், வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறியதோடு, இல்லையென்றால் தான் வீட்டில் கழிவறை கட்டிவிட்டு அழைத்துச் செல்கிறேன் எனக்கூறி திருமணமான மறு நாளே ரம்யாவை அவரது தாய் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டுள்ளார்.

விபரீத முடிவு

இந்நிலையில், தனது வீட்டில் கழிப்பறை கட்டவோ, கழிப்பறை உள்ள வேறு வீட்டிற்கோ அழைத்து செல்லவோ நடவடிக்கை மேற்கொள்ளாமல் தாய் வீட்டுக்கு எதற்கு விடுகிறாய் என கார்திகேயனிடம் ரம்யா முறையிட்டுள்ளார். இதனால் சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ரம்யா தாய் வீட்டில் மன விரக்தியில் இருந்துள்ளார். இந்த சூழலில் சம்பவத்தன்று ரம்யா மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

உயிரிழந்தார்

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரம்யாவின் தாய் மஞ்சுளா, திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவறை அடிப்படை தேவையாகும்

மேலும், ரம்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதம் மட்டுமே ஆவதால், இந்த சம்பவம் குறித்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு விசாரித்து வருகிறார். பெண்களுக்கு கழிவறை வசதி என்பதை விட அது அடிப்படை தேவையாகும். பெண்கள் திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வருவதற்கு முன்பாவது கழிவறை வசதியை ஏற்படுத்திக்கொள்வது மிக அவசியமான ஒன்று.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website