ஜவுளிக்கடையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலதிபர் !!
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஜவுளிக்கடையில் பெண் பலாத்காரம் செய்து தலைமறைவான தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி – மதுரை சாலையில் பங்களாமேடு அருகே பிரபல ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையினை மாரியப்பன் மகன் முருகன் (வயது 32) நடத்தி வருகிறார்.
பெரியகுளம் அருகே உள்ள டி. காமக்காபட்டி கிராமத்தை சேர்ந்த சின்ன கருப்பன் மகள் மேனகா (29). இவர் எம்.ஏ. ஆங்கில பட்டதாரி. மேலும் டிசைனர் ஸ்டுடியோ மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் தொழிலதிபர் முருகனுடன் மேனகாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது. இதனைஅடுத்து மேனகாவை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து, ஏமாற்றி, முருகன் ஜவுளி கடைக்குள் உள்ள ஒரு அறையிலேயே வைத்து பாலியல் உறவு கொண்டதாகவும்,அதன் பின் முருகன் தங்கியுள்ள தேனி பாரஸ்ட் ரோட்டில் உள்ள வீட்டில் வைத்து பலமுறை பாலியல் உறவு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி முருகன் அவரது மேனேஜர் வினோத்தை சாட்சியாக வைத்து மேனகா கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். இதன் பின்னர் மேனகாவை சந்திப்பதை தவிர்ப்பதற்காக முருகன் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துக் கொண்டார்.
மேனகா முருகனை தொடர்பு கொண்டு விசாரித்தபோது தான் சின்னமனூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அமெரிக்காவில் செட்டில் ஆக போவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் உன்னை திருமணம் செய்தது ஒரு நாடகம் என்று கூறியதோடு இனிமேலும் தொந்தரவு செய்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக மேனகா தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி தொழிலதிபர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் தன்னை தேடி வருவதால் வேறு வழியின்றி தொழிலதிபர் முருகன் தேனி டி.எஸ்.பி. அலுவலகத்தில் சரணடைந்தார். இதனை அடுத்து தேனி அனைத்து மகளிர் போலீசார் முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்