நிலநடுக்கம்-தூக்கத்திலேயே பறிபோன பல உயிர்கள். 2,000 கடந்த இறப்பு எண்ணிக்கை: 3 நாட்கள் தேசிய துக்கம் அறிவிப்பு
மொராக்கோ நாட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய நிலையில், இறப்பு எண்னிக்கை தற்போது 2,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இறப்பு எண்ணிக்கை 2,000
மொராக்கோவை பொறுத்தமட்டில் மிக அரிதான சம்பவமாக பார்க்கப்படும் இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் ரிக்டர் அளவில் 7.2 என பதிவான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
மொராக்கோ அதிகாரிகள் தெரிவிக்கையில், இதுவரை இறப்பு எண்ணிக்கை 2.000 கடந்துள்ளதாகவும், ஆனால் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக முடியலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானிய மக்கள் மிக அதிகமாக செல்ல விரும்பும் Marrakech நகரம் நில்நடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் அனைவரும் அதிர்ச்சியிலும் பீதியிலும் உள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
200 மைல்களுக்கு அப்பால் உள்ள தலைநகர் ரபாத்திலும், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் நடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த 24 முதல் 48 மணிநேரம் மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பதில் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
கொடிகள் அரைக்கம்பத்தில்
இதுவரை 2,000 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 1,404 பேர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மொராக்கோவில் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த துக்கக் காலத்தில் நாடு முழுவதும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர், உணவுப் பொருட்கள், கூடாரங்கள் மற்றும் போர்வைகளை வழங்குவதற்காக நாட்டின் ஆயுதப்படைகள் தங்கள் மீட்புக் குழுக்களை அனுப்பி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.