நீட் தேர்வு: முதலிடம் பிடித்து மதுரை மாணவன் சாதனை!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. நீட் தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில், 9.03 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை மதுரையை சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயகா நீட் நுழைவுத் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று அகில இந்தியா தரவரிசையில் 30ஆவது இடத்தையும், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி ஹரிணி 702 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் திரிதேவ் விநாயகா. “நீட் தேர்வில் வெற்றி பெற 2 ஆண்டு வகுப்பறை திட்டத்தில் சேர்ந்தேன். அப்போது கருத்துகளைப் புரிந்து கொள்வதில் எடுத்த முயற்சிகள் மற்றும் கற்றல் அட்டவணையை கண்டிப்பாகப் பின்பற்றியதால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது.” என்றார்.
கேள்வி வங்கிகளை ஆன்லைனில் கூர்ந்து படித்ததாக தெரிவித்துள்ள மாணவர் திரிதேவ் விநாயகா, தேர்வுக்கு தயாராகும் வகையில் நேர மேலாண்மை திறன்கள் குறித்த மெய்நிகர் ஊக்க அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டதாகவும், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோர் ஆதரவு காரணமாக தான் இந்த நிலையை எட்ட முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.