மாடித்தோட்டத்தில் அவரைக்காய் பயிரிடும் முறையை பற்றி தெரியுமா …?

November 24, 2022 at 7:28 am
pc

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் அவரைக்காய் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • grow bag அல்லது தொட்டி
  • அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண், உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
  • விதைகள்
  • நீர் தெளிக்க பூவாளி தெளிப்பான்
  • பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்
தொட்டிகள்

தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு இட்டு தொட்டியை நிரப்ப வேண்டும். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும். செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

விதைத்தல்

நோய் தாக்காத ஆரோக்கியமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். அவரையில் செடி அவரை, கொடி அவரை உள்ளன. செடி அவரைக்கு 3 விதைகள் வரை ஒரு தொட்டியில் ஊன்றலாம். கொடி அவரைக்கு 3 முதல் 4 விதைகள் வரை ஊன்றலாம்.

நீர் நிர்வாகம்

விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர் ஊற்ற வேண்டும்.

பந்தல் முறை

மாடித்தோட்டத்தில் பந்தல் போடுவது சுலபமான வேலை. அதற்கு நான்கு சாக்குகளில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். பின்னர் இதில் கயிறு/கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும்.

உரங்கள்

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

பாதுகாப்பு முறைகள்

கொடி அவரையில் வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றும். செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒரு முறை கிளறி விட வேண்டும். பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.

பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பைகளில் ஊற்ற வேண்டும். இது சிறந்த நோய் தடுப்பானாக செயல்படும்.

அறுவடை

காய்களை முற்றி விடாமல் சரியான பருவத்தில் இருநாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும். இது 3 முதல் நான்கு மாதம் வரை பலன் கொடுக்கும்.

அவரைக்காய் பயன்கள்:

அவரை பிஞ்சை வாரம் இருமுறை சேமித்து உண்பதினால் உடல் ஆரோக்கியம் பெறும், பித்தம் குறையும்.
அவரை பிஞ்சில் துவர்புச் சுவை உள்ளதால் இது ரத்தத்தை சுத்திகரிக்கும்.
ரத்த நாளங்களில் அதிகப்படியாக சேரும் கொழுப்புகளை குறைக்கும் தன்மை உடையதால் இதனை ரத்த அழுத்தம், இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாட உணவில் அவரைக்காய் சேர்த்துக்கொள்வது நல்லது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அவரைக்காய் உண்பதினால் நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம்,தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website