‘அக்னிபத்’ திட்டம்: நாடு முழுவதும் 600 ரெயில்கள் ரத்து!

June 21, 2022 at 10:06 am
pc

முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக நாடு தழுவிய முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) பல்வேறு அமைப்புகள் சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தன. ஆனால் இந்த போராட்டத்துக்கு பிரதான கட்சிகள் எதுவும் முறைப்படி ஆதரவு அளிக்காததால், ஓரிரு பகுதிகளை தவிர நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த போராட்டத்தால் பாதிப்பு இல்லை.

அதேநேரம் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஏராளமான ரெயில்கள் எரிக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாநிலங்களில் நேற்று ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக பீகாரில் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 612 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதில் 223 ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகும். இதைத்தவிர மேலும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கியும், ஒரு வழியில் ரத்து செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இதனால் ரெயில் பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பல ரெயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானது. அக்னிபத் போராட்டம் மற்றும் வன்முறையின் முக்கிய களமாக திகழ்ந்த பீகாரில் நேற்றைய பாரத் பந்த், போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கின. அதேநேரம் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தன. இதைப்போல சில இடங்களில் வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளில் போக்குவரத்தும் குறைந்த அளவிலேயே காணப்பட்டன.

முழு அடைப்பையொட்டி ரெயில் நிலையங்களில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சில மாவட்டங்களில் போலீசார் கொடி அணிவகுப்பும் நடத்தினர். மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் மேற்கு வங்காளத்தில் வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின. ரெயில் மற்றும் சாலை போக்குவரத்திலும் எவ்வித இடையூறும் இல்லை. அதேநேரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹவுரா பாலம் மற்றும் ரெயில் நிலையம் உள்பட பல்வேறு முக்கியமான இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உத்தரபிரதேசத்தில் இந்த முழு அடைப்பு லேசான தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்கும் வன்முறை சம்பவங்களை தவிர்க்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக அரியானா மற்றும் பஞ்சாப்பின் பல இடங்களில் நேற்றும் போராட்டங்கள் நடந்தன. அரியானாவின் பதேகாபாத், ரோத்தக் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனினும் இதில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்ததாக தகவல் இல்லை. இரு மாநிலங்களிலும் மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

காங்கிரசார் போராட்டம் தலைநகர் டெல்லியில் அக்னிபத் திட்டம் மற்றும் ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணை ஆகிய இரட்டை பிரச்சினையை முன்வைத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக சிவாஜி பாலம் ரெயில் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டதால் ½ மணி நேரத்துக்கு மேலாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மறியல் தொடர்பாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதைப்போல ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், சச்சின் பைலட், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசல் நாடு தழுவிய முழு அடைப்பையொட்டி டெல்லியின் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்த போலீசார், பல்வேறு போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் விதித்தனர்.

அத்துடன் தீவிர வாகன சோதனையும் நடந்தது. இதனால் தலைநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நொய்டா மற்றும் குருகிராமில் இருந்து டெல்லி நோக்கி வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். அதேநேரம் டெல்லியில் வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கின. முழு அடைப்பால் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website