அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்கள் ஜாக்கிரதை!

September 1, 2022 at 10:31 am
pc

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளின் நீராதாரங்களாக கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 

இந்த நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அணையின் மதகுகள் வழியாக அமராவதி ஆற்றில் 2900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை முதல் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்தது. கடந்த 48 மணி நேரத்தில் அதிக பட்சமாக திருப்பூர் மாவட்டம் அமராவதி அணைப்பகுதியில் 103 மில்லி மீட்டர் மழை பதிவானது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக அங்குள்ள வரதமாநதி, பொருந்தலாறு, குதிரையாறு அணைகள் நிரம்பி வழிவதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள நீர் முறையே திருப்பூர் மாவட்டம் கொழுமம் மற்றும் அலங்கியம் பகுதியில் அமராவதி ஆற்றில் கலந்து வருகிறது.இதன் காரணமாக நேற்று காலை முதல் தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது‌.

இன்று இரண்டாவது நாளாக அமராவதியின் துணை ஆறுகளான பொருந்தலாறு,வரதமாநதி,குதிரையாற்றில் தொடர்ந்து வெள்ள நீர் வந்து கொண்டிருப்பதால் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்று வருகிறது. இதன் காரணமாக தாராபுரம் அமராவதி ஆற்றின் கரையில் உள்ள மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தற்போது அமராவதி ஆற்றில் சுமார் 12 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் காவிரிக்கு சென்று கொண்டிருக்கிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website