அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிர்ப்பு…ராஜினாமா செய்ய வேண்டும்!! திமுகவில் சலசலப்பு

August 17, 2022 at 12:34 pm
pc

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், அவரது மகனும், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக உள்ளார். இளம் அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குட் புக்கில் இடம் பெற்றார். எனினும், அவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் ஏற்பட்டன. 10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிவு, தஞ்சை மாணவி வழக்கு, அண்மையில், கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு என, அனைத்துமே பள்ளிக் கல்வித் துறை சம்பந்தப்பட்டவை. இதனால் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கடும் பிரஷர் ஏற்பட்டது.

இந்த விவகாரம் ஓய்வதற்குள், தற்போது, புதிய பிரச்னை ஒன்று எழுந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி இயங்கி வருகிறது. இதன் செயல் அதிகாரியாக மணிகண்ட பூபதியை நியமித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பரும், தென் மாவட்ட தொழிலதிபருமான ஒருவர், மணிகண்ட பூபதியை நியமிக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் இந்த நியமனம் நடந்ததாகக் கூறப்படுகிறது

ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட மணிகண்ட பூபதி, கல்வித் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இந்த நியமன உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ராஜினாமா செய்ய வேண்டும் என்று, திமுகவினரும், திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

“காலை சிற்றுண்டி திட்டத்தை அட்சயா பாத்ரா என்னும் ஆர்எஸ்எஸ் துணை நிறுவனத்திற்கு வழங்கிய பழனிசாமிக்கும், கல்வி டிவியை மணிகண்ட பூபதிக்கு வழங்கிய உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? அதனால் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும். திமுகவினர் யாராவது அரசு வேலை கேட்டால் அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தான் நியமனம் எனச் சொல்லும் அரசு, 

பெரிய பதவியில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை நியமித்திருப்பது நியாயமா? என்று கேள்விகளை கேட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website