“அமைச்சர் மா. சுப்பிரமணியனின் சவாலை ஏற்கிறேன்” – சீமான்!

December 11, 2023 at 6:25 am
pc

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, திருவொற்றியூரில் வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “2015 ஆம் ஆண்டு கனமழை காரணமாகத் துரித நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விரைந்து மக்களுக்கு மின்சாரம் கொடுத்தோம். ஆனால் தற்போது அப்படியில்லை. இந்த மாதிரி மழைக் காலங்களில் மக்களுக்கு மின்சாரம் தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காகத்தான் தரையில் மின்சார ஒயரை பதித்து மின் இணைப்பு அளித்தோம்.

தற்போது மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கு நாங்கள்தான் காரணம். மழை வெள்ளம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் வடிகால் அமைத்தது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதனிடையே, சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “வெள்ள பாதிப்புகள் குறித்துப் பேசி அரசியல் செய்யாமல், மழைநீர் வடிகால் பணிகளுக்காக 4000 கோடி என்ன ஆனது என்று கேட்கும், எடப்பாடி பழனிசாமி மற்றும் சீமான் ஆகியோருடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயார். யாராக இருந்தாலும், மேடையில் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “அமைச்சர் மா. சுப்பிரமணியனை நான் மதிக்கிறேன். அவருடைய சவால் மற்றும் அழைப்பை நான் ஏற்கிறேன். ஆனால், அவர்கள்தான் நிறைய ஊடகங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களே நேரத்தை குறித்துவிட்டு எங்கு வரச் சொல்கிறார்களோ அங்கே வருவேன்” என்று கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website