அரசுப் பேருந்துகளில் புதிய வசதியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!

February 29, 2024 at 8:30 am
pc

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரக அலுவலகத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 புதிய பேருந்துகள் இயக்கத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (28.02.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பாரத ஸ்டேட் வங்கியுடன் (SBI) இணைந்து மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் (Electronic Ticketing Machine) மூலமாக மின்னணு பயணச்சீட்டு (e-Ticketing) வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமை தாங்கினார்.

இந்த திட்டத்தினால் பயணச்சீட்டு வழங்கும் வேகம் மற்றும் எளிதான பயன்பாட்டிற்காக, பேருந்துகளில் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நடத்துநர்கள் இதன் மூலம் பயணிகளிடம் ரொக்கப் பணம், ஏடிஎம் அட்டை, கடன் அட்டை மற்றும் யூபிஐ மூலம் பணம் பெற்றுக் கொண்டு, பயணச் சீட்டு வழங்குவார்கள். இதனால் பேருந்துகளில் பயணிகள் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லாமல் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு நடைவாரியாகவும் மற்றும் நிலை (ஸ்டேஜ்) வாரியாகவும் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் வசூல் விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை மேலாண் இயக்குநர் .க.குணசேகரன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், அரசு உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website