அரிசியே இல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பச்சை பயறு தோசை ….!!

July 14, 2022 at 10:57 am
pc

எப்பவும் அரிசி சேர்த்த தோசையை தான் நம்முடைய வீட்டில் செய்வோம். ஆனால் அரிசி சேர்க்காமல் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக் கூடிய பச்சை பயிரை வைத்து, சுவையான, சூப்பரான, வாசமாக ஒரு தோசை எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பச்சை பயிரை சுண்டலாக செய்து கொடுத்தால் சில குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இப்படி தோசை சுட்டு கொடுங்கள். நீங்கள் உடல் எடையை குறைப்பவர்களாக இருந்தாலும் அரிசியில் செய்த தோசையை தவிர்த்து விட்டு, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த தோசையை தாராளமாக சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சை பயறு – 1கப்
கொத்தமல்லி தழை – 2 கைப்பிடி அளவு,
சின்ன வெங்காயம் தோல் உரித்தது – 12 பல்,
தோலுரித்த பூண்டு – 6,
கருவேப்பிலை – 1 கொத்து,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி தோல் சீவியது – 2 இன்ச்,
சீரகம் – 1/2 ஸ்பூன்

செய்முறை :

முதலில் 1 கப் அளவு பச்சை பயிரை முந்தைய நாள் இரவே ஊற வைத்து விடுங்கள். அப்போது தான் காலையில் தோசை செய்ய முடியும். பச்சை பயிறு 8 மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வேண்டும். ஊறிய பச்சைப் பயிரை நன்றாக கழுவி விட்டு, தண்ணீரை வடித்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.
ஊறிய இந்த பச்சை பயிருடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, சின்ன வெங்காயம் தோல் உரித்தது – பல், தோலுரித்த பூண்டு, கருவேப்பிலை , பச்சை மிளகாய் , இஞ்சி தோல் சீவியது ,சீரகம் இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த தோசை மாவை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். 90% இந்த மாவு அரைபட்டால் போதும்.


அரைப்பட்ட இந்த மாவில் இறுதியாக தேவையான அளவு உப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவை போட்டு ஒரு ஓட்டு ஓட்டி அப்படியே ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். தோசை மாவு பதத்திற்கு இதை கரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். தோசை கல்லை அடுப்பில் வைத்து இந்த மாவில் தோசை வார்த்தால் அவ்வளவு அருமையாக இருக்கும். எப்போதும் போல அரிசி மாவு தோசை வார்ப்பது போலவே மெல்லிசாக ஊற்றி சிவக்க வைத்து எடுக்கலாம்.


ஆனால் இந்த தோசை வேகுவதற்கு சில நிமிடங்கள் எடுக்கும். கல்லில் இந்த தோசையை ஊற்றி சிவப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து பொறுமையாக வேக வைத்து திருப்பி போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறம் வந்தவுடன் தேங்காய் சட்னி, காரச் சட்னி, சாம்பார் உடன் சுடச்சுட பரிமாறி பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும்.


இந்த தோசை மாவில் புளிப்பு சுவை சுத்தமாக இருக்காது உங்களுக்கு தேவைப்பட்டால் இதில் இரண்டு டேபிள்ஸ்பூன் புளித்த தயிரை ஊற்றி அரைத்துக் கூட தோசை சுடலாம். அப்படி இல்லை என்றால் அரைத்த மாவை அரை மணி நேரம் அப்படியே ஒரு மூடி போட்டு வைத்துவிட்டு, அதன் பின்பு தோசை வார்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த தோசை ரெசிப்பியை யாரும் மிஸ் பண்ணாதீங்க. ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website