ஆஃபிஸில் வேலை நேரத்தில் தூக்கம் வராமல் இருக்க இதோ சூப்பரான டிப்ஸ்…!!

June 13, 2022 at 8:34 am
pc

மணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து வேலை பார்க்கும் போது பலரும் சோர்வாக உணருவார்கள். அதிலும் ஒரு சிலருக்கு தூங்கும் அளவிற்கு சென்றுவிடுவார்கள். ஏனென்றால், அந்த இடத்தில் கண்களுக்கு தான் அதிக வேலைக் கொடுக்கப்படுகிறது. இதனால், கண்கள் மிகவும் சோர்வடைந்து மூளையையும் சோர்வடையச் செய்கிறது.

வேலை செய்யும் நேரத்தில் இப்படி மிகுந்த சோர்வாக இருப்பது கொடுத்த வேலைகளை உரிய நேரத்தில் முடிக்காமல் போகலாம். இப்படி பகலில் தூக்கம் வருவதற்கு என்ன காரணம். இரவில் சரியான நேரம் தூங்காமல் இருப்பது மட்டும் தான் முக்கிய காரணம். ஒரு மனிதன் இரவில் சரியாக 8 மணி நேரம் நிம்மதியான தூக்கத்தை பெற்றால் மட்டுமே பகலில் தூங்கி வழியாமல் இருக்க முடியும்.

பள்ளி, கல்லூரி செல்லும் காலத்தில் வகுப்பறையில் தூங்கி வழிந்த காலம் வேறு. அங்கு தூங்கினால் அப்போது நடத்தப்படும் பாடத்தை நண்பர்களிடம் கூட கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். ஆனால், வேலை செய்யும் இடத்தில் இப்படி தூங்கி வழிந்தால் நம்முடைய வேலையை வேறு யார் செய்வார்கள். எனவே, வேலை நேரத்தில் வரும் பகல்நேர தூக்கத்தை எப்படி தவிர்க்கலாம் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். வேலை செய்யும் போது தூங்கி வழியாமல் இருக்க உதவும் சில வழிகளை இங்கே பார்க்கலாம்.

ரிலாக்ஸ் செய்யுங்கள்:

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தொடர்ச்சியாக வேலை செய்யும்போது மதிய நேரத்தில் உங்களுக்கு களைப்பை அதிகப்படுத்தலாம். எனவே, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாச்சும் இருக்கையிலிருந்து எழுந்து நடப்பது உங்க ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும். உங்கள் ஆபிஸிற்கு உள்ளயே அடிக்கடி சீட்டியிலிருந்து எழுந்து சென்று சிறிது நேரம் நடக்கலாம். அல்லது பால்கனியில் சூரிய ஒளி படும் இடத்தில் சிறிது நேரம் நின்றுவிட்டு வாரலாம். இப்படி உங்களை ரிலாக்ஸ் செய்துக் கொள்வதால் சுறுசுறுப்பாகவும், அலெர்ட்டாகவும் இருக்க உதவும். அதுமட்டுமல்லாமல், வேலையிலும் சிறப்பாக கவனம் செலுத்த முடியும்.

நிறைய தண்ணீர் அருந்துங்கள்:

வேலை நேரத்தில் அதிகமாக காபி அல்லது டீ குடிப்பது அவ்வபோது உங்களுக்கு எனர்ஜியை தருமே தவிர, நிரந்தம் கிடையாது. ஆனால், அதற்கு பதிலாக நிறைய தண்ணீர் குடித்தால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும் இதனால், உடல் விரைவில் சோர்வடையாது. அதுமட்டுமல்லாமல், நிறைய தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உடலில் நீரிழப்பும் வேலை செய்யும் நேரத்தில் தூக்கம் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

பணியிடத்தை பிரைட்டாக வைத்திருங்கள்:

நீங்க அமர்ந்து வேலை செய்யும் இடத்தில் ஜன்னல் இருந்தால் ஸ்கிரீனை ஓபன் செய்து சிறிது இயற்கை ஒளியை உள்ளே விடுங்கள். இது உங்களுக்கு அதிக ஆற்றல் மற்றும் விழிப்புணர்வை பெற உதவும். அதுமட்டுமல்லாமல், உங்களை சுற்றியுள்ள சூழலை முடிந்த அளவிற்கு வெளிச்சமாக வைத்துக் கொள்ள முயற்சியுங்கள். ஏனெனில், வெளிச்சம் குறைவான இடத்தில் வேலை செய்யும் போது ஆற்றல் குறைந்து, மந்தமான இருப்பதை போன்ற ஃபீளிங்கை ஏற்படுத்தும்.

ஸ்நாக்ஸ்:

வேலை நேரத்தில் பழங்கள், நட்ஸ், கேரட், பாதாம் போன்ற ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரையை நாள் முழுவதும் சீராக வைத்திருக்க உதவும். இதனால், சோர்வு ஏற்படாது. எனவே, ஆபிஸ் செல்லும்போது இம்மாதிரியான ஸ்நாக்ஸ் உடன் எடுத்து செல்ல மறக்காதீர்கள்.

உணவில் கவனம்:

சில உணவுகளை சாப்பிட்ட உடனே தூக்கம் வரும். குறிப்பாக, பொங்கல், தயிர் சாப்பாடு போன்றவற்றை காலை நேரத்தில் சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்றால் வேலை செய்ய ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தூக்கம் கண்ணைக் கட்டும். எனவே, இம்மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதேபோல், மதிய நேரத்திலும் அதிகமாக உணவை சாப்பிட வேண்டாம். ஏனெனில் அதுவும் தூக்கத்தை வரவழைக்கும்.

டீ பிரேக்:

உங்களுக்கு எப்போதெல்லாம் தூக்கம் வருவது போல உணருகிறீர்களோ, எந்த வேலை இருந்தாலும் அதை அப்படியே ஓரங்கட்டி வைத்து விட்டு ஒரு டீ அல்லது காபி குடித்துவிட்டு வேலையை தொடங்குங்கள். பின்னர் சுறுசுறுப்பாக உணரச் செய்வீர்கள். சக ஊழியர்களிடம் அவ்வப்போது பேச்சுக் கொடுக்கலாம். இது உங்களையும் தூங்க விடாது, அவர்களுடைய தூக்கத்தையும் போக்கும்.

பாட்டு கேளுங்கள்:

பல நிறுவனங்களில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு பாட்டு அனுமதி வழங்கியிருப்பார்கள். எனவே, ஹெட்செட் போட்டு ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் உங்களுக்கு பிடித்த பாடலை கேட்டு உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளலாம். அதாவது, சோர்வாக இருக்கும்போது இவ்வாறு செய்தால் உங்கள் மூளையை தட்டி எழுப்பி, உங்களுடைய மனநிலையை புத்துணர்ச்சியாக மாற்றும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website