“ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகாக தெரிகிறார்கள்” – ராம்தேவ் பாபா சர்ச்சை கருத்து!

November 26, 2022 at 9:32 pm
pc

யோகா குரு ராம்தேவ் பாபா பெண்கள் பற்றி கூறிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து மூன்று நாட்களுக்குள் தெளிவுபடுத்த வேண்டும் என்று மராட்டிய மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ரூபாலி சகாங்கர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நேற்று தானேயில் நடந்த விழா ஒன்றில் ராம்தேவ் பாபா கலந்து கொண்டார். இந்த விழாவில் மராட்டிய மாநில முதல் மந்திரியின் மகனும் எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அவர்கள் முன்னிலையில் பேசிய ராம்தேவ் பாபா, பெண்கள் சேலையில் அழகாக இருக்கிறார்கள்.

சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள். ஆனால் என் பார்வையில், அவர்கள் ஒன்றும் அணியாவிட்டாலும் அழகாகத் தெரிகிறார்கள் என்று கூறினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சகாங்கர் அனுப்பியுள்ள நோட்டீசில், பெண்களின் கவுரவத்தையும் கண்ணியத்தையும் கெடுக்கும் வகையிலான அநாகரீகமான உங்கள் கருத்துக்கு எதிராக ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநில மகளிர் ஆணையம், 1993-ன் பிரிவு 12 (2) மற்றும் 12 (3)-ன் படி, பாபா ராம்தேவ் தனது கருத்து குறித்த விளக்கத்தை மூன்று நாட்களுக்குள் கமிஷன் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு ஆணையம் அறிவுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.

ராம்தேவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சட்ட மேலவை துணைத் தலைவர் நீலம் கோர்கே, இந்த கருத்துக்கள் பெண்கள் மீதான அவரது சிதைந்த மனநிலையை காட்டுகிறது என்று கூறியுள்ளார். யோகா மூலம் சமூகத்திற்கு நிதானம் மற்றும் ஆரோக்கியம் பற்றி சொல்லும் அவர், பெண்களிடம் இத்தகைய அசுத்தமான அணுகுமுறையைக் கொண்டிருப்பது மிகவும் தவறானது. ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் தன் வீட்டில் உள்ள சகோதரர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் என பல ஆண்களுடன் பழகுகிறாள். எல்லா ஆண்களும் பெண்களை இப்படி பார்ப்பதில்லை. 

நம் நாட்டில் தங்களை குரு என்று சொல்லிக் கொள்ளும் பல ஆண்கள் இது போன்ற அநாகரீகமான கருத்துக்கள் கூறுவது வெட்கக்கேடானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் துணை முதல் மந்திரியின் மனைவி, மற்றும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் ராம்தேவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ராம்தேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். பெண் தொழிலாளர்கள் ராம்தேவின் புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தனர். மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் சாவந்த், யோகா குருவின் உண்மையான மனநிலையை அவரது கருத்து அம்பலப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website