ஆயுத பூஜையை கொண்டாடுவதன் காரணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

October 3, 2022 at 11:20 am
pc

நாம் ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாடுவது அந்தந்த நாட்களுக்கு உகந்த தெய்வங்களை வணங்கி அன்று அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக வணங்குவது தான் நம் பண்டிகையின் முக்கியமான சாராம்சம். இந்த ஆயுத பூஜைக்கு முன்பே நவராத்திரி தொடங்கி ஒவ்வொரு நாட்களிலும் தேவியர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதங்களையும் அனுகிரகங்களையும் முழுவதுமாக பெற பூஜைகள் செய்வோம். இது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த ஆயுத பூஜை இதில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டது அதை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வருடம் முழுவதும் நாம் நல்ல முறையில் வாழ இறைவனை வேண்டி வணங்குகிறோம், இவ்வளவு ஏன் இறைவனையே நல்லபடியாக வணங்குவதற்கும் கூட நமக்கு உறுதுணையாக இருப்பது நம் தொழில்,கல்வி போன்றவை தான். இந்த நாளில் நமக்கு பயன்பட்ட இந்தப் பொருள்களை வைத்து இந்த பூஜையை செய்ய வேண்டும். அன்றைய நாளில் ஒருவர் எந்த தொழிலை செய்பவராக இருந்தலும் சரி அவரின் தொழிலுக்கு முக்கியமான பொருள் எதுவோ, எந்த பொருள் இல்லாமல் அவர்களால் பணி செய்யவே முடியாதோ, அந்தப் பொருளை அன்று துடைத்து சுத்தம் செய்து பூஜை அறையில் வைத்து உன்னால் தான் நான் வருடம் முழுவதும் பணம் சம்பாதித்து பயனடைகிறேன். ஆதலால் இந்த நாளில் உன்னை வைத்து வணங்கி உனக்கு பூஜை செய்கிறேன் என்று அவைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக செய்வது இந்த ஆயுத பூஜை.

சரஸ்வதி பூஜையும் அதே போல் தான் ஒரு மனிதன் நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் அவனுக்கு ஞானம் என்பது மிக மிக அவசியம். எந்த வேலை செய்வதற்கும் சரி, படிப்பிற்கும் சரி ஞானம் இல்லாமல் ஒருவனால் ஒரு அடி கூட முன்னேற முடியாது. அந்த ஞானத்தை அருள்பவள் சரஸ்வதி தேவி. நாம் சரஸ்வதி தேவியாக பார்ப்பது நாம் படிக்கும் புத்தகங்களை தான். எனவே தான் அந்த நாளில் குழந்தைகள் படிக்கும் புத்தகங்களை வைத்து நாம் சரஸ்வதி தேவியிடம் ஞானத்தை வழங்க வேண்டிக் கொண்டு அன்றைய தின பூஜைகளை செய்கிறோம்.

இந்த ஆயுத பூஜை நாளில் காலையில் எழுந்து உங்கள் வீட்டை சுத்தம் செய்து பூஜை வேலைகளையெல்லாம் முடித்து நெய்வேத்தியங்கள் செய்து அன்று நீங்கள் உழைப்புக்காக,வருமானத்திற்காக,பயன்படுத்தும் எந்த பொருளாக இருந்தாலும் சரி அதற்கு மஞ்சள், குங்குமம்,பூ வைத்து மரியாதை செய்து, குழந்தைகளின் கல்வி ஞானத்தை தரக்கூடிய படிக்கும் புத்தகங்களுக்கும் மஞ்சள் குங்குமம் விட்டு பூஜை அறையில் வைத்து வணங்கி மரியாதை செலுத்துங்கள். பூஜை முடிந்தவுடன் காலையில் நீங்கள் பூஜை செய்தீர்கள் ஆனால் அன்று மாலை விளக்கு வைத்த பிறகு பூஜையில் வைத்த பொருளை சற்று வடக்குப் பக்கமாக நகர்த்தி சிறிது நேரம் கழித்து எடுத்து பிள்ளைகளிடம் புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்லுங்கள். உங்களுடைய தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்களை எடுத்து அதை வைத்து ஒரு சிறு வேலையாவது செய்து விடுங்கள். நீங்கள் காலையில் பூஜை செய்தால் மாலையில் இதை போல் செய்யலாம். நீங்கள் பூஜையே மாலையில் தான் செய்கிறீர்கள் என்றால் இதை அடுத்த நாள் காலையிலும் செய்யலாம். ஆனால் பூஜை முடிக்கும் போது வைத்த பொருளை சற்று வடக்கு புறமாக நகர்த்தி வைத்து சிறிது நேரம் கழித்து எடுத்து நீங்கள் பொருட்களை உபயோகப்படுத்துங்கள்.

நாம் பூஜையும் பண்டிகையும் கொண்டாடுவதற்கான நோக்கம், பயன் என்ன என்பதை நாமும் அறிந்து நம் குழந்தைகளுக்கும் அதை சொல்லி புரிய வைத்து பண்டிகை, பூஜைகளை செய்ய பழகுங்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website