ஆவிகளிடம் பேச வைப்பதாக கூறி என்ஜினீயரை ஏமாற்றிய கேரள மந்திரவாதி!

May 12, 2023 at 1:21 pm
pc

சென்னை புரசைவாக்கம், ஆண்டர்சன் தெருவைச் சேர்ந்தவர் கவுதம் சிவசாமி (வயது 51). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். 

அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- நான் நைஜீரியாவில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தபோது, கேரளாவைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரும் என்னுடன் வேலை செய்தார். 

இருவரும் நல்ல நண்பர்களாக பழகினோம். பின்னர் நான் நைஜீரியாவை விட்டு சென்னை வந்து விட்டேன். சுப்ரமணியும் கேரளாவுக்கு திரும்பி வந்துவிட்டார். நண்பர் என்ற முறையில் சென்னைக்கு எனது வீட்டுக்கு அடிக்கடி வந்து அவர் என்னை பார்த்து பேசுவார்.

சுப்ரமணிக்கு மாந்திரீக வேலை தெரியும். நான் தலைசிறந்த ஆன்மிகவாதி. கோவில்களுக்கு அடிக்கடி போவேன். சுப்ரமணியும் என்னுடன் கோவில்களுக்கு வருவார். 

அவர் தெய்வங்களுடன் பேசுவதாக சொல்வார். புட்டபர்த்தி சாய்பாபா அவருடன் பேசுவதாக சொன்னார். இறந்துபோன எனது தாயாரின் ஆவி கூட அவருடன் பேசுவதாக கூறினார். எந்த ஆவியாக இருந்தாலும், அவரிடம் பேசும் என்பார். 

சாமி போட்டோவில் இருந்து விபூதியை கொட்ட வைப்பார். கையில் இருந்து திடீரென்று எலுமிச்சை பழத்தை எடுப்பார். இதுபோல மாயாஜால வித்தைகளை செய்து காட்டுவார். அவரது செயல்களை பார்த்து அதை உண்மை என்று நானும் நம்பினேன்.

அவரைப்போல எனக்கும் தெய்வங்கள் மற்றும் ஆவிகளிடம் பேச ஆசை ஏற்பட்டது. குறிப்பாக புட்டபர்த்தி சாய்பாபாவிடம் பேச விரும்பினேன். எனது ஆசையை சுப்ரமணியிடம் கூறினேன். அவரும் தெய்வங்கள் மற்றும் ஆவிகளை என்னிடம் பேசவைப்பதாக கூறினார். புட்டபர்த்தி சாய்பாபாவை பேச வைப்பதாக நம்பிக்கையூட்டினார்.

இதற்காக கேரளாவில் உள்ள அவரது வீட்டுக்கு என்னை அடிக்கடி அழைத்து சென்று பூஜை போட்டார். எனது விபரீத ஆசையை புரிந்து கொண்ட அவர், என்னிடம் அவ்வப்போது லட்சம், லட்சமாக பணம் கறந்து வந்தார். ரூ.2 கோடி வரை என்னிடம் வாங்கி விட்டார். ஆனால் சுப்ரமணி கூறியதுபோல, தெய்வங்களிடமோ, ஆவிகளிடமோ, குறிப்பாக புட்டபர்த்தி சாய்பாபா ஆவியிடமோ என்னால் பேச முடியவில்லை. 

ஒரு கட்டத்தில் சுப்ரமணி மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது மாந்தீரிக, மாயாஜால வேலை எல்லாம் மோசடி என்பதை தெரிந்து கொண்டேன். இதையும் படியுங்கள்: ‘மோக்கா’ புயல் எதிரொலி: சென்னை உள்பட 6 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு அவரது தொடர்பை விட முடிவு செய்தேன். அவர் என்னிடம் ஏமாற்றி வாங்கிய ரூ.2 கோடி பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன். அவர் பணத்தை திரும்ப தர மறுத்தார். 

மாந்திரீகம் மூலம் என்னை தீர்த்துக்கட்டி விடுவதாக மிரட்டினார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, அவரிடம் நான் இழந்த ரூ.2 கோடி பணத்தை மீட்டுத்தரும்படி வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். 

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் மீனா, கூடுதல் துணை கமிஷனர் அசோகன் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜான்விக்டர் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. 

மந்திரவாதி சுப்ரமணி கேரளமாநிலம் கொல்லம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய தேடினார்கள். ஆனால் அவர் போலீஸ் கையில் சிக்கவில்லை. 

தலைமறைவாகி விட்டார். அவரிடம் போலீஸ் என்று சொல்லாமல், குறி கேட்கவேண்டும், என்பது போல போனில் பேசி போலீசார் நடித்தனர். அதை உண்மை என்று நம்பிய சுப்ரமணி, திருவனந்தபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு போலீசாரை வரச்சொன்னார்.

அங்கு குறி கேட்பவர்கள் போல மாறு வேடத்தில் சென்ற போலீசார், அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கைதான சுப்ரமணி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சுப்ரமணி (வயது 52) சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:- 

நான் பட்டப்படிப்பு படித்துள்ளேன். சிறுவயது முதலே எனக்கு தெய்வ பக்தி உண்டு. மந்திரம் கால், மதி முக்கால் என்பது பழமொழி. அதை அடிப்படையாக வைத்துதான், நான் செயல்படுவேன். மாந்திரீக வேலை எனது தொழில் அல்ல. நானும் நைஜீரியா சென்று, வேலைபார்த்தேன். என்னிடம் தெய்வங்கள் பேசுவது உண்மை. 

அதுபோல தனக்கும் தெய்வங்களிடம் பேச வேண்டும், என்ற ஆசை கவுதமுக்கும் ஏற்பட்டது. நானும் அதற்கு முயற்சி செய்தேன். நான் கவுதமிடம் பணம் வாங்கியது உண்மை. 

ஆனால் ரூ.2 கோடி வாங்கவில்லை. சிறிது, சிறிதாக கொடுத்தார். தெய்வங்களிடம் பேசுவது என்பது ஒரு தனி கலை. அதற்கு கவுதம் தகுதியான ஆள் இல்லை. இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website