இங்கயாவது அவங்க வாழவிடுங்கடா – இலங்கை தமிழர் முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

கரூர் அருகே, இலங்கை தமிழர் முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டியில் இலங்கை தமிழர் முகாம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில், தோரணக்கல்பட்டியில், இலங்கை தமிழர் முகாம் அமைக்க கூடாது என, வலியுறுத்தி கடந்த, 10 நாட்களாக வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றுதல் உள்ளிட்ட, பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம், தோரணக்கல்பட்டியில் இலங்கை தமிழர் முகாம் அமைக்கும் பணியை தடுத்ததாக, அ.தி.மு.க.,வை சேர்ந்த சணப்பிரட்டி பஞ்., முன்னாள் தலைவர் இளங்கோவன், 66; வீரபாண்டிய கட்ட பொம்மன் பண்பாட்டு கழக, கரூர் மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி, 43, கரூர் தெற்கு நகர அ.தி.மு.க., துணை செயலாளர் ஏகாம்பரம், 50, ஆகியோரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும், நேற்று காலை, தோரணக்கல்பட்டி பகுதியை சேர்ந்த ரகுராஜ், 34, பாலாஜி, 44, சுரேஷ், 38, பொம்முராஜ், 43, அழகர்சாமி, 42, ஆகிய ஐந்து பேரை, தான்தோன்றிமலை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அதை கண்டித்து, மாநில வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், தோரணக்கல்பட்டியில் வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலை முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், தோரணக்கல்பட்டி யில் இலங்கை தமிழர் முகாம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும்; கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; முகாம் அமைக்கும் பணியை நிறுத்தாதபட்சத்தில், கரூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாநில விடுதலை களம் தலைவர் நாகராஜ் உள்பட, 250க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.