இந்தியாவில் கொரோனா நான்காம் அலை வந்துருச்சா… என்ன சொல்கிறது களநிலவரம்

January 4, 2023 at 12:30 pm
pc

சுமார் ஒரு வருஷம் இருக்கும். கொரோனா வைரஸை பார்த்து பயப்பட்டு… இப்படி பலரும் கூறுவதை கேட்க முடிகிறது. தற்போது மீண்டும் அப்படிப்பட்ட சூழல் வந்துவிட்டதா? என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. கிட்டதட்ட இந்தியாவில் கொரோனா வைரஸின் நான்காவது அலையா எனப் பேசும் அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது. முன்னதாக 2020ஆம் ஆண்டு ஜனவரியில் முதல் தொற்று பதிவானது

கொரோனா பிளாஷ்பேக்

அதன்பிறகு படிப்படியாக அதிகரித்து அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அலை உச்சம் தொட்டது. ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து பாதிப்புகள் குறையத் தொடங்கின. பின்னர் 2021 மே மாதம் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டது. ஒரேநாளில் சுமார் 4 லட்சம் பேர் பாதிக்கப்படும் சூழல் உண்டானது. பலி எண்ணிக்கை கைமீறிப் போனது.

இதில் சொந்தங்களை இழந்த இந்தியர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இதையடுத்து நிலைமை சீரடைந்தது. கடைசியாக 2022 ஜனவரியில் மூன்றாவது அலை உச்சம் தொட்டது. ஆனால் உயிரிழப்புகள் பெரிதாக இல்லாதது ஆறுதல் அளித்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்புகள் படிப்படியாக விலகத் தொடங்கின. சுமார் 10 மாதங்களாக இயல்பு வாழ்க்கையை வாழ முடிந்தது.

லேட்டஸ்ட் நிலவரம்

இனி லேட்டஸ்ட் களநிலவரத்தை ஆராயலாம். இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் பரவல் என்பது மிக மிக குறைவாகவே காணப்படுகிறது. கடந்த ஞாயிறு (ஜனவரி 1) வரை கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒருவார காலத்தில் 1,526 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் 25 சதவீதம் (1,219) அதிகம் ஆகும்

புதிய பாதிப்புகளின் வேகம்

எனவே ஜனவரி மாதம் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்கிறது மத்திய அரசு. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் புதிய பாதிப்புகளின் வேகம் அதிகமாக உள்ளது. ஒருவாரத்தில் புதிய பாதிப்புகள் 116ல் இருந்து 276ஆக அதிகரித்துள்ளது. இவ்வளவு வேகத்தில் வேறு எந்த மாநிலத்திலும் பாதிப்புகள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

தமிழக நிலவரம்

இதையடுத்து கேரள மாநிலத்தை கருத்தில் எடுத்தால் ஒருவார காலத்தில் 416ல் இருந்து 467ஆக புதிய வைரஸ் பாதிப்பு அதிகரித்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 47ல் இருந்து 86ஆக நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் 168ல் இருந்து 172ஆகவும், டெல்லியில் 72ல் இருந்து 81ஆகவும், ராஜஸ்தானில் 48ல் இருந்து 81ஆகவும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.

நான்காம் அலை

மற்ற மாநிலங்களில் 50க்கும் குறைவான எண்ணிக்கையில் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தற்போதைய சூழலில் நான்காம் அலை எதுவும் இல்லை. ஆனால் மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டியது அவசியம்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். உருமாற்றம் அடைந்த வைரஸ் மாதிரிகளை கண்டறியும் வகையில் பகுப்பாய்வு ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website