இந்திய நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் தமிழ்நாட்டு செங்கோல்!

May 26, 2023 at 9:55 am
pc

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் நிறுவும் திட்டம் உள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். செங்கோல் ஆட்சி என்பது மக்களுக்கு நாட்டு தலைவன் நீதி தவறாத நேர்மையான நல்ல ஆட்சியை வழங்குவதன் அடையாளம் ஆகும். அதே சமயம் இத்தகைய செங்கோலை கையில் தாங்கி ஆட்சி செய்யும் அரசன் நிச்சயமாக நீதி தவறமாட்டான் என்பது நம்பிக்கை.

இத்தகைய பெரும் மகத்துவம் பெற்ற செங்கோல் மரபானது ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போது நாட்டின் அடுத்த தலைவனின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு நாட்டின் நேர்மை கொடியேற்றப்படும்.

கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் திகதி மவுண்ட்பேட்டன் பிரபு இந்திய சுதந்திரம் குறித்து நேருவிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அவர் தமிழகத்தின் மூதறிஞர் ராஜாஜியிடம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மூதறிஞர் ராஜாஜியும், திருவாவடுதுறை ஆதினத்திடம் இந்தியாவில் நல்லாட்சி அமைய வேண்டிய செங்கோல் கொடுத்து ஆசீர்வதிக்க கேட்டுக் கொண்டார்.

அதனடிப்படையில், தங்க செங்கோல் ஒன்று செய்யப்பட்டு அதை ஆகஸ்ட் 14ம் திகதி இந்தியாவை ஆட்சி புரிந்த மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் வழங்கினார்கள். பின் அதனை மீண்டும் அவரிடம் இருந்து பெற்று அதற்கு புனித நீர் தெளித்து, தேவார மூர்த்திகள் தேவார திருப்பாவை முழுவதுமாக பாடி முடித்து மகத்துவம் நிறைந்த செங்கோலை இந்தியாவின் புதிய பிரதமர் நேருவிடம் வழங்கினார்கள்.

இவை ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போது புதிய தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எண்ணப்பட்டது, ஆனால் தமிழகத்தில் செய்யப்பட்ட இந்த மகத்துவம் நிறைந்த செங்கோல் தற்போது அலகாபாத் நகரில் உள்ள ஆனந்த பவனின் கண்ணாடி பெட்டியை அலங்கரித்து வருகிறது.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களுடன் பேசிய போது, இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது இந்தியாவில் புதிய பாரம்பரியமும் துவங்க உள்ளது, பலருக்கு செங்கோல் குறித்த வரலாறும் முக்கியத்துவம் தெரிந்திருக்கவில்லை, எனவே புதிய நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோலுக்கான இடத்தை நிறுவும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இந்திய சுதந்திரத்தை குறிக்கும் விதத்தில் சோழர்களின் பெருமை தாங்கிய செங்கோல் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்டது. அந்த செங்கோல் தற்போது பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்படும்.

இதற்காக தமிழகத்தில் இருந்த ஆதீன குழு ஒன்று டெல்லிக்கு பயணம் செய்து அவர்கள் செங்கோலை பிரதமர் மோடியிடம் வழங்குவர். மேலும் செங்கோலுக்காக இந்தியாவில் புதிய வலைத்தளம் ஒன்றும் தொடங்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதனை யாரும் அரசியல் நிகழ்வுடன் இணைக்க வேண்டாம், சிறந்த நிர்வாகம் என்பது சட்டத்தின் கீழ் இயங்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website