“இந்தி திணிப்பு” – சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்!

March 10, 2023 at 7:15 am
pc

தமிழ்நாட்டில் வியாபாரம் செய்துகொண்டு இந்தியில் கஸ்டமர் கேர் நடத்துவதாகவும், பெட்ரோல் விலை உயர்ந்த பிறகும் டெலிவரி ஊழியர்களுக்கான கமிஷனை குறைப்பதாக கூறி ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியர்கள் சென்னையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் ஸ்விக்கி, ஜொமாட்டோ, டன்சோ போன்ற நிறுவனங்களில் உணவு, பொருட்களை வீடு தேடி சென்று டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால், இந்த தொழிலாளர்களுக்கு எந்த விதமான பணி பாதுகாப்பையும், நலத்திட்டங்களையும் நிறுவனங்கள் வழங்குவது இல்லை என குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது.

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே நூற்றுக்கணக்கான ஸ்விக்கி ஊழியர்கள் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ஸ்விக்கி வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுபவர்கள் இந்தியிலேயே பேசுவதாகவும், அவர்கள் தமிழில் பேச வேண்டும் எனவும் இந்த போராட்டத்தின்போது முழக்கமிட்டனர். ஸ்விக்கி நிர்வாகத்துக்கு எதிராக பதாகைகளை ஏந்தி இவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு தொழிலாளர் இவ்வளவு நேரம்தான் பணியாற்ற வேண்டும் என்று இந்திய தொழிலாளர் சட்டம் வரையறுத்து இருக்கிறது. ஆனால், அதை மீறி அதிக நேரம் பணியாற்ற சொல்கிறார்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு பெட்ரோல் 50 ரூபாய்க்கு விற்றபோது ஆர்டருக்கு 40 ரூபாய் கமிஷன் கொடுத்தார்கள்.

தற்போது ரூ.100 ஐ தாண்டி பெட்ரோல் விற்கும் நிலையில் ரூ.20 மட்டுமே கமிஷன் வழங்குகிறார்கள். நாங்கள் இந்த நிறுவனத்தின் ஊழியர்தான் என்பதை அங்கீகரித்து பணி ஆணை கூட வழங்குவது இல்லை. தமிழ்நாட்டில் வியாபாரம் செய்கிறார்கள். ஆனால், கஷ்டமர் கேரை மட்டும் இந்தியில் நடத்துகிறார்கள். இதனை மாற்ற வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டு INDIAN FEDERATION OF APP BASED TRANSPORT WORKERS (IFAT) மற்றும் சர்வதேச போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு (ITF) இணைந்து இந்தியாவின் 6 நகரங்களில் நடத்திய ஆய்வில் 95.3% தொழிலாளர்களுக்கு விபத்து, மருத்துவக் காப்பீட்டு போன்றவை வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

இந்த ஊழியர்களின் குடும்பத்தினர் கொரோனா 2 வது அலையின்போது பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதில் 2 முன்னணி நிறுவனங்கள் சிறந்த பணியிடங்களுக்கான தரவரிசையில் (FAIR WORKS INDIA RATINGS 2021-ல்) 10க்கு பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளன. இந்த 2 உணவு டெலிவரி நிறுவனங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டிலும் தரவரிசையில் கடைசி இடத்திலேயே இருந்தன.

மேலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் குறிப்பிட்ட அளவு உணவை ஊழியர்கள் டெலிவரி செய்தாக வேண்டும் என நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால், தினம் தினம் அவர்களுக்கு விபத்து போன்று அசம்பாவிதங்கள் ஏற்படும்போது இந்த நிறுவனங்கள் உதவுவது கிடையாது என்று கூறப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website