இரத்த தானம் செய்வதின் முக்கியத்துவமும் அதன் நன்மைகளும் ….!!

June 16, 2022 at 10:35 am
pc

தானத்திலே சிறந்த தானம் இரத்த தானம் என்று கூறுவர். அந்த வகையில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் வகையில், இரத்தம் தேவைப்படும் நபர்களுக்கு இரத்தம் கொடுத்து உதவுதல் மூலம் அவர்களின் உடல் ஆரோக்கியமடையும் .

வள்ளுவரின் குறளுக்கு ஒப்பிட்டு

நம் உடலில் உள்ள ஒரே திரவ உறுப்பாக இரத்தம் உள்ளது. வள்ளுவர் எவ்வாறு “நீரின்றி அமையாது உலகு” எனக் கூறினாரோ, அது போலவே ரத்தம் இல்லாமல் நம் உடல் சீராக இயங்காது. உடலின் ஒரு முக்கிய அங்கமாக இரத்தம் செயல்படுகிறது. உடலில் மூலைமுடுக்கெல்லாம் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் உறுப்பாக இரத்தம் உள்ளது . இவ்வாறு ஒரு உடலில் இரத்தம் இல்லையெனில், அந்த உடல் செயலிழந்து காணப்படும்.

உலக இரத்த தான தினம்

ஆண்டு தோறும், ஜூன் மாதம் 14 ஆம் நாள் உலக இரத்த தான தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் இரத்த தானம் செய்வதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, இரத்த தானம் செய்ய விருப்பமுடையவர்கள் தானம் செய்வர் . பொதுவாக இரத்த தானம் செய்வதால் பல்வேறு சிறப்பான நன்மைகளைப் பெறலாம். ஆனால், இரத்த தானத்தை செய்வதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளன. எல்லோராலும் இரத்த தானத்தை செய்ய முடியாது. இதில் யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம், யாரெல்லாம் செய்ய முடியாது போன்ற முழுவிவரங்களையும் காணலாம் .

இரத்த தான சிறப்பு நாள்

ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படும் இந்த தினத்தில், நம்மால் செய்ய முடிந்தவற்றை செய்யலாம். இந்த நாளில் இரத்த தானம் செய்ய முடியவில்லை என்றாலும், இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக் கூறுதல், இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துதல், கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் மூலம் மக்களுக்கு இந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்த்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் .

இரத்த தானத்துக்கான பரிசோதனைகள்

இரத்த தானத்துக்கு முன்,

இரத்தம் கொடுப்பதற்கு முன், ஒருவரின் உடலில் உள்ள இரத்தப் பிரிவு மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவு, உடலின் வெப்பநிலை மற்றும் ஹீமோகுளோபின் அளவு போன்றவற்றை பரிசோதிக்க வேண்டும்.

இரத்த தானத்துக்குப் பின்,

இரத்த தானம் அளித்த பின்னர், டெங்கு, மலேரியா, டைஃபாய்டு, ஹெப்படைட்டிஸ், எச்.ஐ.வி, எய்ட்ஸ் போன்ற நோய்கள் உள்ளனவா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.

இரத்த தானம் செய்வதற்கான கட்டுப்பாடுகள்

45 கிலோவுக்கு அதிகமாக உடல் எடை கொண்ட மற்றும் 18 முதல் 60 வரையிலான வயதுடைய நபர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம்.

மது அருந்தியவர்கள் மற்றும் புகைப்பழக்கம் உள்ள நபர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது.

ஏதாவது தொற்று நோய் உள்ளவர்களோ, காய்ச்சலில் இருப்பவர்களோ, இரத்த தானம் செய்யக் கூடாது.

பெண்கள் மாதவிடாய்க் காலங்களிலோ அல்லது அவர்களின் கர்ப்பக் காலங்களிலோ செய்யக் கூடாது.

பாலூட்டும் தாய்மார்களும் இரத்த தானம் செய்யக் கூடாது.

மேலும், 18 வயதுக்கு மேல் 45-க்கும் அதிகமான எடை கொண்ட இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக உள்ள நபர்கள் இரத்த தானம் செய்யலாம் .

இந்த வகை கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் நபர்களின் உடலில் இருந்து மட்டுமே இரத்தம் எடுக்கப்படும்.

இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

பொதுவாக இரத்த தானம் செய்வதன் மூலம் உடல் எடை குறையும் .

இதனால், பெரியவர்களில் உடல்நலன் மேம்பட இது ஒரு சிறந்த வழியாகும்

இரத்த தானம் செய்வதன் மூலம், ஹீமோக்ரோமாடோசிஸைத் தடுக்க முடியும்.

அதாவது, ஹீமோக்ரோமாடோசிஸ் என்பது உடலில் அதிகமாக இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதால் ஏற்படக் கூடிய ஒரு சிக்கலாகும். இரத்த தானம் செய்வதால், உடலில் அதிக இரும்புச் சத்து சுமையைக் குறைக்க முடியும்.

இதய நோய் அபாயத்தைக் குறைக்க முடியும். பொதுவாக சரியான இடைவெளியில் இரத்த தானம் அளிப்பது மிகவும் சிறந்தது.

புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும். அதாவது, உடலில் அதிகப்படியான இரும்புச்சத்து இருந்தா, புற்றுநோய் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். இரத்த தானம் செய்வதன் மூலம், உடலில் இரும்புச்சத்து அளவைக் குறைக்கலாம். மேலும், இதன் மூலம் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website