உங்கள் ஜீன்ஸ் புதுசாவே இருக்கணுமா …? கண்டிப்பா இந்த டிப்ஸா பாலோவ் பண்ணுங்க …!!

October 21, 2022 at 12:40 pm
pc

ஆடைகளை வாங்குவது என்றாலே எப்பொழுதும் மகிழ்ச்சி தான். அதில் ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆடைகள் என்றால் ஒரு தனி அலாதி தான். அந்த வகையில் இப்போது பெரும்பாலோனருக்கு இந்த ஜீன்ஸ் மோகம் அதிகரித்து விட்டது. இந்த ஜீன்ஸ் ஆடை வந்த புதிதில் ஆண்கள் மட்டும் பெருமளவில் இதை பயன்படுத்தி வந்தார்கள், ஆனால் இப்போதெல்லாம் பெண்களும் இந்த ஆடையை பெருமளவு பயன்படுத்துகிறார்கள். இப்போது இதே ஜீன்ஸ் துணியை வைத்து பல்வேறு ஆடைகள் வந்து விட்டது. அதிக விலை கொடுத்து வாங்கும் இந்த ஜீன்ஸை புதிது போல் வைத்திருக்க வேண்டும் என்றால் நாம் அடிக்கடி துவைக்க கூடாது என்பது மட்டும் தான் இந்த ஜீன்ஸ் பற்றி நமக்குத் தெரிந்த ஒரு பொதுவான கருத்து. ஆனால் அது அப்படி அல்ல என்பதை தெளிவுபடுத்தும் ஒரு பதிவுதான் இது.

ஜீன்ஸ் ஆடையை நாம் அடிக்கடி துவைக்க கூடாது என்றாலும் இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் போட்ட பிறகு இதை கட்டாயமாக துவைத்து தான் போட வேண்டும். இரண்டு மாதம் மூன்று மாதம் எல்லாம் துவைக்காமல் போடக்கூடாது. ஏனென்றால் ஜீன்ஸில் நம் உடலில் இருந்து வெளிவரும் வேர்வை அந்த துணியில் படிந்து இருக்கும் அதிக நாட்கள் துவைக்காமல் போடும் போது இதன் மூலம் நமக்கு சரும பிரச்சனைகள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளது. இது முக்கியமான குறிப்பு ஆனால் இது பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இதை அடிக்கடி துவைக்கும் போது இரண்டு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று துணியின் நிறம் மாறி விடக்கூடாது. அதே நேரத்தில் அதனுடைய தன்மையும் மாறி விடக்கூடாது அதற்கான வழிமுறைகள் இது.

ஜீன்ஸ் ஆடையை துவைப்பதற்கு முதலில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து அதில் வினிகர் சேர்த்து அரை மணி நேரம் வரையில் ஊற வைத்து அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல் துவைக்கலாம். இதன் மூலம் துணியின் நிறமும் மங்காது அதன் தன்மையும் மாறாது. உங்களிடம் வினிகர் இல்லை என்றால் அதற்கு பதில் கல் உப்பை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஊற வைக்கும் நேரம் அரை மணி நேரத்திற்கு பதிலாக ஒரு மணி நேரமாக இருக்கட்டும். இது முதல் குறிப்பு.

ஜீன்ஸை ஊற வைக்க எந்த காரணம் கொண்டும் சுடுதண்ணீர் பயன்படுத்தவே கூடாது சிலர் சுடுதண்ணியில் ஊற வைத்தால் அழுக்கு உடனே சென்று விடும் என்று ஊற வைப்பார்கள் ஆனால் அது இந்த ஜீன்ஸ் ஆடைக்கு பொருந்தாது இது இரண்டாவது குறிப்பு. அடுத்து இப்படி ஊறவைத்த துணியை நீங்கள் மற்ற துணிகளுடன் கட்டாயமாக துவைக்கவே கூடாது. ஜீன்ஸ் ஆடையை தனியாகத்தான் துவைக்க வேண்டும். இது மூன்றாவது குறிப்பு.

ஊற வைத்து துவைக்கும் போது ஜீன்ஸை உள்புறமாக திருப்பித் தான் துவைக்க வேண்டும். அப்போது தான் அதன் நிறம் கொஞ்சம் கூட மாறாமல் அதே நேரத்தில் உள் பக்கம் தான் உங்கள் உடலில் உள்ள வியர்வைகள் படியும் அதுவும் சேர்ந்து சுத்தமாகும். ஜீன்ஸ் துவைக்கும் போது உள்புறமாக திருப்பித்தான் துவைக்க வேண்டும். இது நான்காவது குறிப்பு.

அடுத்து துவைக்கும் போது துணியின் அந்த தன்மை அதாவது சில ஜீன்ஸ் இறுக்கமாக இருக்கும். சில ஜீன்ஸ் தளர்வாக இருக்கும். இது அதனுடைய தன்மை. இது அப்படியே நெடுநாள் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் துவைக்கும் போது ஜீன்ஸில் பட்டன், ஜிப் போன்றவற்றை போட்ட பிறகு தான் துவைக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் வாங்கும் போது இருந்த அதே தன்மையுடன் இருக்கும். இது ஐந்தாவது குறிப்பு.

அடுத்து நீங்கள் ஊற வைத்து துவைத்து எடுத்த இந்த ஜீன்ஸை வெயிலில் காய வைத்தால் மட்டுமே சீக்கிரம் காயும் நிழலில் ஆற வைத்து சீக்கிரம் காயாதென்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் காய வைக்கும் போதும் ஜீன்ஸ்யை உள்புறம் திருப்பியே காய வைக்க வேண்டும். வெயிலில் படும் போது நிறம் மாறிவிடும் அது மட்டும் ஒன்றி வெயில் உள்புறம் நன்றாக படும் போதுதான் அதனுள் தங்கி இருக்கும் வியர்வை கிருமி நீங்கும். ஏனென்றால் இதை நீங்கள் ஒரு முறை போட்டவுடன் துவைப்பதில்லை. இந்த காய வைக்கும் முறையும் முக்கியமான ஒன்று இது ஆறாவது குறிப்பு.

கடைசியாக ஊற வைத்து துவைத்து அலசி காய வைத்த துணியை நீங்கள் வைக்கும் போது மற்ற துணிகளை போல் உங்கள் விருப்பத்திற்கெல்லாம் அதை மடித்து வைக்கக்கூடாது. நீங்கள் எப்படி மடிக்கிறீர்களோ துணி அந்த மடிப்பிற்கு மாறி விடும் அதனுடைய ஷேப்பில் இருக்காது. அதற்காக அப்படியே போட முடியாது அல்லவா, இந்த துணிகளை நீங்கள் நன்றாக ஒரு ரோல் செய்து மடிக்க வேண்டும். முதலில் ஜீன்ஸ்யை இரண்டாக மடித்து அதை அப்படியே ரோல் செய்து மடித்து உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள் இது ஏழாவது குறிப்பு.

பார்த்து பார்த்து ஆசைப்பட்டு வாங்கும் எதையும் நாம் சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஜீன்ஸ் வாங்கினால் அதிக நாள் துவைக்காமல் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து மட்டும் வாங்கினால் பத்தாது, அப்படி அதிக நாள் துவைக்காமல் இருந்தால் என்னவாகும் என்பதையும் துவைத்தால் எப்படி துவைக்க வேண்டும் என்பதையும் இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள் அல்லவா.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website