உடன்பால் : சினிமா விமர்சனம்

December 31, 2022 at 12:15 pm
pc

சார்லியின் மகன்கள் லிங்கா, தீனா. மகள் காயத்ரி. கடனில் சிக்கி லிங்கா கஷ்டப்படுகிறார். வீட்டை விற்று பணம் தரும்படி தந்தை சார்லியை நிர்ப்பந்திக்கிறார். சார்லி மறுத்து விடுகிறார். சார்லி சென்றிருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து பலர் சாகிறார்கள். சார்லியும் அதில் சிக்கி இறந்து போனதாக குடும்பத்தினர் ஒப்பாரி வைக்கின்றனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் உதவி தொகையை அரசு அறிவிக்கிறது. அந்த பணத்தை பிரித்து கொள்வதில் லிங்காவும், காயத்ரியும் மோதிக் கொள்ள சார்லி உயிருடன் வந்து அதிர வைக்கிறார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வீட்டிலேயே இறந்து போகிறார். அதன்பிறகு நடக்கும் திருப்பங்கள் மீதி கதை. லிங்கா இயலாமை, பாசம், கடன் தவிப்புகளை யதார்த்தமாக வெளிப்படுத்துகிறார். அபர்ணதி, காயத்ரியும் கதாபாத்திரங்களில் நிறைவாக உள்ளனர். காயத்ரி கணவராக வரும் விவேக் பிரசன்னாவின் குசும்புத்தனங்கள் சிரிக்க வைக்கின்றன. பொறுப்பான குடும்பத் தலைவர் கதாபாத்திரத்தில் சார்லி வாழ்ந்து இருக்கிறார். பேரக் குழந்தைகளுடன் விளையாடுவதிலும் வீட்டை விற்க மறுக்கும் வைராக்கியத்திலும் அவரது அனுபவ நடிப்பு பளிச்சிடுகிறது.

சகோதரியாக வரும் தனம், சார்லியின் இன்னொரு மகனாக வரும் தீனா, ஒரு காட்சியில் மட்டும் வந்து போகும் மயில்சாமி கதாபாத்திரங்களும் சிறப்பு. ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்து கதைக்கு உயிர் ஊட்டி உள்ளனர். பெரும்பகுதி கதை வீட்டுக்குள்ளேயே முடங்குவதை தவிர்த்து இருக்கலாம். நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார சிக்கல்கள் உறவுகளை எப்படி சிதைக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சீனிவாசன். மதன் கிறிஸ்டோபரின் கேமரா சிறிய வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை படமாக்குவதில் கடுமையாக உழைத்து இருக்கிறது. சக்தி பாலாஜியின் இசையும் பக்க பலம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website