உதயநிதி குறித்து அவதூறு பேச்சு.., பவன் கல்யாண் மீது பாய்ந்த புகார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பவன் கல்யாண் மீது புகார்
திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், “இங்கு அதிகமான தமிழ் மக்கள் இருப்பதால் தமிழில் சொல்கிறேன். தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை வைரஸ் என்று சொல்கிறார்கள்.இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு ஒன்று சொல்கிறேன். இந்த மாதிரி பல பேர் சொல்லியிருக்கிறார்கள். அதில் நீங்கள் முதல் ஆளும் இல்லை, கடைசி ஆளும் இல்லை. சனாதன தர்மம் எப்போதும் அப்படியே தான் நிலைத்திருக்கிறது. அதை தடுக்க முடியாது.
சனாதன தர்மத்தை உங்களால் எதுவுமே பண்ண முடியாது, யாராலும் அழிக்கவும் முடியாது. அதனை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்” என்று உதயநிதியை சாடி பேசினார்.
இதற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “LET’s WAIT AND SEE” என்று பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்துள்ளார்.
அவர் கொடுத்துள்ள புகாரில், திருப்பதி லட்டு விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியதாகவும், இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசியதாகவும், சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிராக வன்மைத்தை கக்கியுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.