“எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்” என்பதை யோசியுங்கள்: கமலின் பதிவுக்கு பிரபல இயக்குனரின் பதில்..!

March 7, 2024 at 8:46 pm
pc

புதுவையில் 9 வயது சிறுமி 6 கொடூர நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் இது குறித்து கண்டனம் தெரிவித்து நேற்று கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை செய்திருந்தார்.

அதில் போதைப் பொருளால் ஏற்படும் குற்ற அதிகரிப்பு குறித்தும், போதை பொருளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் குறிப்பிட்டு இருந்தார். கமல்ஹாசனின் இந்த பதிவுக்கு இயக்குனர் லெனின் பாரதி கூறியுள்ள பதில் தான் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனின் பதிவுக்கு இயக்குனர் லெனின் பாரதி கூறியிருப்பதாவது:

‘எங்கே போகிறோம்’ என்று ஆராய்வதை போல்… கதாநாயக வழிபாட்டுச் சினிமாக்கள் மூலம் ஆணாதிக்கம், வன்முறை,போதை, வெற்றுப் பெருமை, வக்கிரம், குரூரம் என இளம் உள்ளங்களில் விஷ விதைகளை விதைத்து.. “எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்” என்று ஆராய வேண்டிய பொறுப்பும் சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது..

முன்னதாக கமல்ஹாசன் போதை பொருள் குறித்த செய்த பதிவில் கூறியிருந்ததாவது:

எங்கே போகிறோம்?

புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா?

குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது.

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website