‘என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது’ – ராகுல் ஆவேசம்!

September 21, 2024 at 5:42 pm
pc

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அண்மையில் அமெரிக்கா சென்று இருந்தார். அப்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே உரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார். அதில் மதச் சுதந்திரம் தொடர்பான கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துப் பேசுகையில், ‘இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிந்து குருத்துவாராவுக்கு செல்ல முடியுமா? அதேபோல் காடா அணிந்து குருத்துவாராவுக்கு செல்ல முடியுமா? என்பது இந்தியாவில் கேள்வியாக இருக்கிறது’ எனத் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் பேச்சு இந்தியாவில் சர்ச்சையையும், பேசுபொருளாகவும் ஆகியது. ராகுல்காந்தி இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சீக்கிய உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்தியாவில் சீக்கியர்களுக்கு மதச்சுதந்திரம் இல்லை என்பதைபோன்ற தோற்றத்தை அந்நிய மண்ணில் ராகுல்காந்தி ஏற்படுத்த முயன்றுள்ளார் என பாஜகவினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வந்தனர்.

பாஜக அமைச்சர்கள் சிலர் ஒரு படி மேலாக சென்று ராகுல் காந்தியை பயங்கரவாதி என்று விமர்சித்தும் கருத்துகளை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் ராகுல் காந்தி இந்த சர்ச்சை குறித்து தற்பொழுது மௌனம் களைத்திருக்கிறார், ‘அமெரிக்காவில் நான் பேசிய கருத்து குறித்து பாஜகவினர் பொய்களைப் பரப்பி வருகின்றனர். 

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள ஒவ்வொரு சீக்கிய சகோதரர்களையும் பார்த்துக் கேட்கிறேன் நான் கூறியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? ஒவ்வொரு சீக்கியரும், ஒவ்வொரு இந்தியனும் அச்சமின்றி தங்களுடைய மதத்தை சுதந்திரமாக பின்பற்றும் நாடாக இந்தியா இருக்க வேண்டாமா? என்ற கேள்வி எழுகிறது. வழக்கமாக பாஜக பொய்களை மட்டுமே கையாளுகிறது. 

உண்மையை சகித்துக் கொள்ள முடியாததால் என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது. ஆனால் இந்தியாவை வரையறுக்கும் மதிப்புகளுக்காக நான் எப்பொழுதும் குரல் கொடுப்பேன். வேற்றுமை, சமத்துவம், அன்பு என்பதுதான் நமது ஒற்றுமை’ என தன்னுடைய கருத்தை எக்ஸ் வலைத்தளம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website