எலிசபெத் மறைவு… வானில் தோன்றிய அதிசயம்- திகைத்து போன பிரிட்டன்!

September 9, 2022 at 5:52 pm
pc

பிரிட்டன் வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி என்ற பெருமையை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். 70 ஆண்டுகள் 214 நாட்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்து தனது 96 வயதில் செப்டம்பர் 8, 2022 அன்று காலமானார். இந்நிலையில் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை அருகே வானில் நடந்த நிகழ்வு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் ராணியின் உடல்நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் பதற்றமடைந்த பிரிட்டன் மக்கள் உடனே பக்கிங்ஹாம் அரண்மனை முன்பாக திரண்டனர். அப்போது அரண்மனை அருகே வானில் இரட்டை வானவில் தென்பட்டது. கீழாக ஒரு வானவில் தெளிவாகவும், மற்றொன்று மேற்புறம் சற்று மங்கலாகவும் தெரிந்தது. இதைக் கண்டு மக்கள் ஆச்சரியமடைந்தனர். இத்தகைய நிகழ்வுகள் அரிதாகவே அரங்கேறும் என்று கூறுகின்றனர்

அடுத்த ஒரு மணி நேரத்தில் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ராணியின் மறைவிற்கும், வானில் தோன்றிய அதிசய நிகழ்விற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக பிரிட்டன் மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர். இதற்கிடையில் மழையும் பெய்யத் தொடங்கியதால் பலரும் குடைகளை விரித்து கொண்டு நின்றனர்.

ராணி மறைவை ஒட்டி வின்ட்சர் கோட்டையில் பிரிட்டனின் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. அதற்கு அருகே அற்புதமான வானவில் தோன்றியது ஆச்சரியம் நிறைந்த தருணமாக மக்கள் பார்த்தனர். இந்நிலையில் இரண்டாம் எலிசபெத் மறைவால் பலரும் கண் கலங்கினர். உடனே வண்ண வண்ண பூங்கொத்துகள் வாங்கி வந்து அரண்மனை வாயிலில் அஞ்சலி செலுத்த ஆரம்பித்தனர்.

இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரிடியூ,

ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். எலிசபெத் ராணி மறைவை அடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸ் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். இனிமேல் அவர் ”மன்னர் மூன்றாம் சார்லஸ்” என்று அழைக்கப்படுவார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website