ஒரே ஒரு கிளை இருந்தாலே போதும், தேங்காய் நாரை பயன்படுத்தி புதிய ரோஜா செடியை உருவாக்கி விடலாம்…!!

December 1, 2022 at 7:49 am
pc

செடி வளர்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் நேராக நர்சரிக்குச் சென்று செடிகள் வாங்கி வளர்ப்பதை தான் இன்றளவும் அனைவரும் பின்பற்றி வரும் முறை. ஒரே ஒரு செடி வாங்கி வந்து வளர்த்து அதை வைத்து பல செடிகளை நாமே உருவாக்கி வளர்த்தால், அது எத்தனை நன்றாக இருக்கும். இது செடி பதியம் போட்டு வளர்க்கும் முறை அல்ல. ஒரு செடியின் கிளையை எடுத்து தனியே நட்டு அதன் மூலம் புதிய செடியை உருவாக்கும் முறை. அது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் நன்றாக வளர்ந்த ரோஜா செடியிலிருந்து கொஞ்சம் கனமான ஒரு கிளையை நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். நறுக்கும் போது கிளை சேதம் அடையாமல் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பிறகு அந்த கிளையின் அடியில் அதாவது நாம் புதைத்து வைக்க போகும் இடத்தில் இருக்கும் முட்களை எல்லாம் சீவி எடுத்து விடுங்கள்.

இந்த செடி வளர மண் தேவை இல்லை, ஆனால் தேங்காய் நார் உரம் வேண்டும், அதை வைத்து தான் இந்தச் செடியை நாம் வளர்க்க போகிறோம். தேங்காய் நார் கலவையை எடுத்து தண்ணீர் ஊற்றி நனைத்த பிறகு அதை தண்ணீர் இல்லாமல் பிழிந்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பிழிந்து எடுத்த இந்த கலவை ஒரு தொட்டியில் போட்டு வைத்து கொள்ளுங்கள், இதில் தான் நாம் செடியை நட்டு வைக்க போகின்றோம்.

இப்போது ரோஜா செடியின் அடிப்பகுதி அதாவது நாம் முட்கள் சீவி எடுத்து வைத்துக் கொண்டோம் அல்லவா, அந்த இடத்தில் தேங்காய் நார் கலவையை கொஞ்சமாக எடுத்து ஒரு உருண்டை பிடித்து அந்த கிளையை சுற்றி உருண்டை போல வைத்த பிறகு தேங்காய் நார் உரம் கீழே உதிராமல் இருக்க டிஷ்யூ பேப்பரை வைத்து கட்டி விடுங்கள். டிஷ்யூ பேப்பர் வைத்து கட்டிய பகுதியை அப்படியே மீதம் இருக்கும் தேங்காய் நார் கலவை தொட்டியில் நட்டு வைத்து விடுங்கள். தண்ணீர் வடிய தொட்டியின் கீழே இரண்டு சின்ன ஒட்டைகள் இருந்தால் போதும்.

தொட்டியில் வைத்த இந்த செடியை அதிக வெயில் படும் இடத்தில் வைக்காமல் வெளிச்சம் படும்படியான இடத்தில் மட்டும் வைத்தால் போதும். இந்த தொட்டியில் மேல் கிளையையும் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் டப்பா வைத்து நன்றாக மூடி விடுங்கள்.

இது 15 நாட்கள் வரை அப்படியே இருக்க வேண்டும் இடையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை டப்பாவை லேசாக எடுத்துப் பாருங்கள் (முழுவதுமாக செடியை விட்டு டப்பாவை வெளியே எடுக்க கூடாது) தேங்காய் நாரில் தண்ணீர் இருந்தால் விட்டு விடுங்கள், இல்லை என்றால் லேசாக தெரித்து விடுங்கள் தண்ணீர் அதிகமாக இருந்தால் செடி வேர் விடாது. 15 நாள் கழித்து கவரை எடுத்து விட்டு தேங்காய் நார் கலவையிலிருந்து ரோஜா கிளையை எடுத்து பாருங்கள், கலவை சுற்றி இருக்கும் டிஷ்யூ பேப்பரையும் நீக்கிய பிறகு அந்த கிளையில் வேர்கள் விட்டு இருக்கும். இதன் பிறகு இந்த செடியை நீங்கள் எப்போதும் வளர்ப்பதை போல வேறு தொட்டியில் வைத்து வளர்த்து கொள்ளலாம்.

இந்த முறையில் உங்களுக்கு பிடித்தமான ரோஜா செடியை ஒன்று இருந்தால் போதும், அதை வைத்து பல செடிகளை நீங்களே உருவாக்கி கொள்ளலாம், ஆனால் இப்படி கிளையை வைத்து செடியை உருவாக்கும் போது கிளை நல்ல தடிமனாக இருக்கும் படி பார்க்க வேண்டும், அதை நறுக்கும் போது கிளை சேதம் அடையாமல் நறுக்க வேண்டும், தண்ணீர் அதிகம் இருக்கக் கூடாது, வெயில் நேரடியாக படக்கூடாது, பிளாஸ்டிக் டப்பா அதன் மேல் கட்டி இருக்க வேண்டும், இதையெல்லாம் கவனமாக பார்த்தால் கண்டிப்பாக இந்த முறையில் உங்களால் ஒரு புதிய செடியை உருவாக்க முடியும். இந்த முறையை முயற்சிக்கும் போது ஒரே ஒரு கிளையை மட்டும் வைக்காமல் இரண்டு மூன்று கிளைகள் என்று சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website