கடும் குளிரில் எவரெஸ்ட் சிகரம் தொட்ட சாதனை தமிழன்!

May 27, 2023 at 5:34 pm
pc

சென்னை கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை என்ற இளைஞர் எவரெஸ்ட் சிகரத்தின் மீது வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார். சென்னை கோவளம் பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் ராஜசேகர் பச்சை உலகின் மிக உயர்ந்த மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார்.

இதற்காக அவர் கடந்த ஓராண்டாக கடுமையான மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார், எவரெஸ்ட் சிகரத்தின் மீது அதிகப்படியான குளிர் மற்றும் பனி இருக்கும் என்பதால் ராஜசேகர் பச்சை மணாலி, சோலாங் உள்ளிட்ட குளிர் அதிகம் காணப்படும் பகுதியில் உள்ள மலைச் சிகரங்களின் மீது ஏறி தன்னுடைய மலையேற்ற பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

தன்னுடைய ஓராண்டு கடுமையான பயிற்சிக்கு பிறகு கடந்த ஏப்ரல் 13ம் திகதி அவரது நீண்ட நாள் கனவை நினைவாக்கும் பொருட்டு எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அவரது பயணத்தை தொடங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு மாத கால கடுமையான குளிர் மற்றும் ஆபத்தான பாதைகளை எதிர்கொண்ட பின்னர் மே 19 திகதி சுமார் 8,850 மீட்டர் உயரத்தை அதிகாலை 5.30 மணியளவில் அடைந்து, ராஜசேகர் பச்சை அவருடைய எவரெஸ்ட் மலையேற்ற கனவை நிறைவு செய்துள்ளார்.

மேலும் பாதுகாப்பாக பேஸ்கேம்ப்க்கும் ராஜசேகர் பச்சை திரும்பியுள்ளார், இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனைப் படைத்த இரண்டாவது தமிழர் என்ற பெருமையையும் ராஜசேகர் பச்சை பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக தமிழகத்தின் ஊட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார் கடந்த 2016ம் ஆண்டு வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழர் என்ற பெருமையை பெற்று இருந்தார்.

ராஜசேகர் பச்சை அலைச் சறுக்கு போட்டிகளிலும் சர்வதேச அளவில் பல வெற்றி குவித்துள்ளார், அத்துடன் அவர் அலைச்சறுக்கு பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்த ராஜசேகர் பச்சையை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள். அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய Everest சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website