கனிமொழியை அமோகமாக வரவேற்ற இலங்கை தமிழர்கள்! மக்களோடு உணவு அருந்தி மகிழ்ச்சி..

இலங்கை தமிழர்கள் தயார் செய்த பாரம்பரிய உணவுகளை கனிமொழி சாப்பிட்டு மகிழ்ந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் சார்பில் உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மிகுந்த ஆதரவாக நின்றார்.
தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் ‘ஓலைப்புட்டு’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் பாரம்பரிய உணவகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்ததுடன் இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ந்தார்.
கனிமொழி போதும் போதும் என்று கூறியும் தங்கள் கைப்பக்குவத்தை ருசித்து பார்த்து சொல்லுமாறு இலங்கை தமிழர் பாரம்பரிய உணவு பண்டங்களை அவருக்கு அன்போடு கொடுத்து உபசரித்தனர்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருந்த நிலையில், இதில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது, எப்படி தயாரிக்கப்பட்டது என்பது பற்றியும் ஆர்வமுடன் கனிமொழியிடம் அவர்கள் விளக்கிக் கூறியதையும் காண முடிந்தது.