கலாசேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம்: பேராசிரியர் ஹரிபத்மன் கைது!

April 4, 2023 at 8:20 am
pc

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாசேத்ரா கல்லூரியில் ஏராளமான மாணவிகள் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளை கற்று வருகிறார்கள். இந்த கல்லூரியில் வேலை செய்து வரும் பேராசிரியர்கள் சிலர் மீது மாணவிகள் திடீரென பாலியல் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகாரில் கூறி இருப்பதாவது:- கலாசேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். பேச்சுவாக்கில் படக்கூடாத, தொடக்கூடாத இடத்தில் தொட்டு பேசுவார். ஒரு கட்டத்தில் வெளிப்படையாக என்னை விரும்புவதாக சொல்லி, உல்லாசத்துக்கு என்னை அவரது வீட்டுக்கு அழைத்தார். விசயம் வெளியில் தெரியாமல் பார்த்து கொள்வதாகவும் அவர் உறுதி கூறினார். நான் போக மறுத்தேன். இதனால் அவர் வகுப்பில் பல வகையிலும் தொல்லை கொடுத்தார். இதனால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன். அவர் மீது உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது. 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு இந்த புகார் மனு மீது உடனடியாக அடையாறு அனைத்து மகளிர் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அவர் சென்னை வந்ததும், அவரை கைது செய்ய போலீசார் தயாராக இருந்தனர். திருவான்மியூர் கலாசேத்திரா காலனியில் வசிக்கும் அவரது வீட்டுக்கு சென்று போலீசார், அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினார்கள்.

சென்னை வந்த ஹரிபத்மன் தனது வீட்டுக்கு செல்லாமல் தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் எண்ணை கண்காணித்த போலீசார், அவர் சென்னை மாதவரத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதை கண்டு பிடித்தனர். மாதவரத்தில் ஹரிபத்மனின் தோழி வீடு உள்ளது. அங்கு பதுங்கி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். நேற்று அதிகாலை, அங்கு போலீஸ் படையினர் சுற்றி வளைத்தனர். தோழி வீட்டின் மாடியில் பதுங்கி இருந்த அவர் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவர் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு வைத்து அவரிடம், தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினார்கள். பரபரப்பு வாக்குமூலம் விசாரணையில் கண்கலங்கிய நிலையில் ஹரிபத்மன் கூறிய பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:- எனக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். நான் அவர்களை நேசிக்கிறேன். நான் இதே கலாசேத்ராவில்தான் படித்தேன். இதே கல்லூரியில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்கிறேன்.

நடனம் சொல்லிக்கொடுக்கும்போது நான் மாணவிகளிடம் சகஜமாக பழகுவேன். அதை மாணவிகள் தவறாக புரிந்து கொண்டு என் மீது புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுவும் 2019-ம் ஆண்டு நான் தவறாக நடந்ததாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. என் மீது புகார் கொடுத்துள்ள மாணவி, என்னால்தான் படிப்பை முழுவதும் படிக்காமல் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. அப்போது அதுபோன்ற புகார் என் மீது சுமத்தப்பட்டு இருந்தால், என் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கும்.

நான் கற்றது தெய்வீக கலை. அதை கற்றுக்கொடுப்பதும் தெய்வீகமானது. இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து கைதான பேராசிரியர் ஹரிபத்மன் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 13-ந்தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website