கள்ளக்குறிச்சி கலவரம்: பள்ளிக்கு தீ வைத்ததாக பல அப்பாவி மாணவர்கள் 350 பேர் கைது!

July 19, 2022 at 9:22 am
pc

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி(வயது 17). பள்ளி விடுதியில் தங்கி படித்த இந்த மாணவி, கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த 3 நாட்களாக டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கூறி பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தது.

இதன் மூலமாக நேற்று முன்தினம், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்து, பள்ளிக்கு தீ வைத்தனர். மேலும் அங்கிருந்த பஸ்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

15 மாவட்ட போலீசார் குவிப்பு

கலவரத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் மற்றும் சின்னசேலம், நைனார்பாளையம் குறுவட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டது. மேற்கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க விழுப்புரம், கடலூர், சேலம், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

12 தனிப்படைகள் அமைப்பு

கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள விளங்கம்பாடி, வினைதீர்த்தாபும், இந்திலி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். கலவரக்காரர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையையும் போலீசார் துரிதப்படுத்தினார்கள். பள்ளி வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், மேலும் சமூக வலைதளங்களில் போராட்டம் தொடர்பாக வெளியான வீடியோக்கள், படங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி, 12 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

400-க்கும் மேற்பட்டவர்கள் கைது

நேற்று முன்தினம் 70 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்றும் கைது படலம் நீண்டது. இதில் நேற்று மாலை வரை 350-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன. இதன் மூலம் 2 நாட்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

14 பிரிவுகளில் வழக்குப்பதிவு

இவர்கள் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் திரண்டது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 14 பிரிவுகளின் கீழ் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூர்பேட்டை பகுதி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைதான 400 பேரில் 30 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆவார்கள். இவர்களை விழுப்புரத்தில் உள்ள சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செஞ்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

பெற்றோர் கதறல்

மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள வெவ்வேறு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே கைதானவர்களின் பெற்றோர்கள் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்துக்கு திரண்டு வந்திருந்தனர். போலீசாரிடம் தங்களது பிள்ளைகள் கலவரத்தில் ஈடுபடவில்லை, அவர்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்கள், அவர்களை விட்டுவிடுங்கள் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

பெரியநெசலூரில் பாதுகாப்பு

இதற்கிடையே மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூரிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. கிராமத்துக்கு செல்லும் விருத்தாசலம்-சேலம் சாலை, வேப்பூர் கூட்டுரோடு பகுதி, தொண்டங்குறிச்சி, கழுதூர் என்று கிராமத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெளிநபர்கள் யாரும் கிராமத்துக்குள் நுழையாத வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website