கழுத்து வலிக்கு என்ன காரணம்?தெரிஞ்சிக்கோங்க

March 14, 2023 at 8:01 am
pc

‘செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ என்று அழைக்கப்படும் கழுத்து வலி பற்றி தெரிந்துகொள்ளலாம். கால் நூற்றாண்டுக்கு முன்புவரை இந்த நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வரும் நோயாக இருந்தது. இப்போதோ இது வளரிளம் பருவத்தினருக்கும்கூட வந்துவிடுகிறது. 

கழுத்து வலிக்கு முக்கிய காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதுதான். அப்போது கழுத்தை தசையால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை. 

அதன் வெளிப்பாடுதான் கழுத்து வலி. அதிக சுமையை தலையில் தாங்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொண்டிருப்பது போன்றவை இந்த மாதிரியான கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும்.

கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம். பொதுவாக 40 வயதில் இந்த சவ்வு தேயத்தொடங்கும். ஆனால், இப்போதோ இளம் வயதிலேயே இது தேயத்தொடங்கி விடுகிறது.

காரணம், பலரும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்வது இப்போது அதிகமாகிவிட்டதுதான். கணினி முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்கு உதாரணமாக சொல்லலாம். 

இதுபோல் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு டி.வி. பார்ப்பது, படுத்துக்கொண்டே படிப்பது, படுத்துக்கொண்டே டி.வி. பார்ப்பது, கழுத்தை கோணலாக வைத்துக்கொண்டு உறங்குவது, தலையணைகளை தலைக்கு அடுக்கிவைத்து உறங்குவது, வேலைக்கு செல்ல பல மணிநேரம் பயணிப்பது, பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவது போன்றவையும் கழுத்து வலிக்கு பாதை அமைப்பவைதான். 

இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள்.

அப்போது கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்த தவறான பழக்கம், நாளடைவில் கழுத்து வலியை ஏற்படுத்திவிடும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்து வலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும்.

கழுத்தை எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயைப் புரிந்துகொள்ளலாம். ஆரம்ப நிலையில் உள்ள கழுத்து வலியைச் சாதாரண வலி மாத்திரைகள், களிம்புகளால் குணப்படுத்திவிடலாம். நோய் நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்துகொள்வது, பிசியோதெரபி போன்றவை பலன் தரும். 

நோயின் தன்மையை பொறுத்து சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் ஏற்கனவே இருக்கும் எந்த ஒரு வலியும் அதிகமாகவே உணரப்படும். புதிதாகவும் வலி தோன்றலாம். எனவே, கழுத்து வலிக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு, தேவைப்பட்டால் உளவியல் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website