காதல் தோல்வி… நான் யாரையும் மிரட்டல… பாதிரியார் பரபரப்பு வாக்குமூலம்!

March 24, 2023 at 11:02 am
pc

கொல்லங்கோடு அருகே சூழால் குடயால்விளை பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ. இவர் இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் போட்டோக்கள் ஆபாச சேட்டிங் போன்றவை சமூக வலைதளங்களில் பரவியது. 

இதனால் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார். இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மனைவி ஒருவர் பாலியல் ரீதியாக வாட்ஸ்-அப் சாட்டிங் செய்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தன்னை தொல்லை செய்வதாகவும் மிரட்டியதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார் .


இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

தலைமறைவான பாதிரியாரை பிடிக்க ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடி வந்தனர். இந்த நிலையில் பாதிரியாரின் லேப்-டாப் போலீசாரிடம் சிக்கியது. 

அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் புகைப்படங்கள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கோட்டில் சரண் அடைவதாக தகவல் பரவியது. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று பார்வதிபுரம் பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். 

அங்கு ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதலில் போலீசாரின் கேள்விகளுக்கு பாதிரியார் பதில் அளிக்க அளிக்க மறுத்தார். பின்னர் போலீசார் லேப்-டாப்பில் இருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் குறித்து கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கும் அவர் எந்த பதிலும் கூறவில்லை.

ஆனால் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் நான் வெளியிடவில்லை என்று கூறினார். மேலும் லேப்-டாப்பில் இருந்த ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் குறித்த விவரங்களை போலீசார் கேட்டறிந்தனர். 

அது தொடர்பான விவரங்களை போலீசாரிடம் பாதிரியார் தெரிவித்தார். நான் எந்த பெண்ணையும் மிரட்டவில்லை என்றும் பாதிரியார் கூறினார். வீடியோவில் இருந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். 

ஆனால் பாதிரியார் என்பதால் திருமணம் செய்ய முடியாது இதையடுத்து எனது பாதிரியார் பதவியை ராஜினாமா செய்து விட்டு திருமணம் செய்யலாமா என்று நினைத்தேன். ஆனால் வீட்டில் ஒப்பு கொள்ளவில்லை.

இதையடுத்து நாங்கள் இருவரும் பேசி பிரிந்து விட்டோம். அதன்பிறகு அந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடந்தது. அதன் பிறகு எங்களுக்கிடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

பல மணி நேர விசாரணைக்கு பிறகு போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரை நாகர்கோவில் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தினர். 

மாஜிஸ்ட்ரேட் தாயுமானவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வருகிற 4-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பாதிரியார் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார் காவல் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே லேப்டாப், செல்போனை கைப்பற்றிய போலீசார் அதிலிருந்து பல ஆதாரங்களை திரட்டி உள்ளனர். 

அது தொடர்பான முழு விவரங்களை திரட்டும் வகையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவல் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

பாதிரியாரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் முழு விவரமும் தெரிய வரும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிரியாரால் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website