குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்: முழுவிவரம் இதோ!

July 12, 2023 at 2:34 pm
pc

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 7 ஆயிரம் கோடி ரூபாயை பயன்படுத்துவதற்கு நிர்வாக அனுமதியை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

மாதம் தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தினை எப்படி செயல்படுத்தவுள்ளது என்பதையும், இதற்கான தகுதிகள் என்ன என்பதையும் அரசு விளக்கியுள்ளது.

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு பயன்பெறும் பெண்கள் 21 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன்பு பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஒரு ரேஷன் கார்டுக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், வயதில் மூத்தவர் தான் இதற்கு விண்ணப்பிக்க முடியும். தனது சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட 4 சக்கர கனரக வாகனங்கள் வைத்திருப்போர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.

நியாய விலை கடை பணியாளர்கள், பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று விண்ணப்ப படிவத்தை வழங்குவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை எந்த நாள் ரேஷன் கடையில் கொடுக்க வேண்டும் என்ற திகதியையும் ரேஷன் கடை பணியாளர்கள் குறித்து கொடுக்க வேண்டும். பின்பு, இத்திட்டத்தினால் பயன்பெறும் பெண்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ரேஷன் கடைக்கு சென்று கொடுக்க வேண்டும்.

தகுதியான பெண்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ரேஷன் கடைக்கு கொண்டு செல்லும் போது தங்களது மொபைல் போனையும் எடுத்துச் செல்ல வேண்டும். கடவுச்சொல் (OTP) அனுப்பப்படுவதால் எடுத்துச் செல்ல வேண்டும். ஆதார் கார்டு, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், மின்சார கட்டண ரசீது ஆகியவற்றை அசலாக எடுத்துச் செல்ல வேண்டும். இதனுடைய நகல்களை எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை.

இதற்காக வாரத்தின் 7 நாட்களும் காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் விண்ணப்ப பதிவு முகாம்கள் செயல்படும்.

மேலும், விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு 10 முதல் 12 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், 2 அல்லது 3 கட்டங்களாக விண்ணப்பங்களை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், என்ன காரணம் என்பதை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்கான இணையதள முகவரி பின்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மேல்முறையீடு செய்ய விரும்பினால், 30 நாட்கள் அவகாசத்திற்குள் இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்திற்கான பயன்பெறும் பயனாளரின் குடும்பத்தினுடைய மொத்த ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அதாவது, ஒரு குடும்பத்தினுடைய கணவன் மற்றும் மனைவி இருவரின் வருமானத்தை சேர்த்து மாதம் 20 ஆயிரத்து 833 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website