குஷ்புவின் உருவபொம்மை எரிப்பு: காங்கிரஸ் போராட்டம்!

November 25, 2023 at 4:05 pm
pc

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகிய நிலையில் இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். எக்ஸ் தளத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒருவர் குஷ்புவை டேக் செய்து, அப்போது ஏன் மகளிர் ஆணையம் வரவில்லை எனக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த குஷ்பு, “உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது” எனக் குறிப்பிட்டு விளக்கமளித்திருந்தார். சேரி மொழி என அவர் பயன்படுத்தியது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள குஷ்பு, “பிரஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் குஷ்பு மீது தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தமிழக காங்கிரஸ் சார்பில் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என அறிக்கை வெளியிடப்பட்டது. இன்று மாலை ஐந்து மணிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் குஷ்புவின் வீட்டை முற்றுகையிட போவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது.

தலித் மக்கள் பேசும் மொழியை வன்மம் கொண்ட மொழி, தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவு படுத்தி பேசியதாக புகார் கூறப்பட்ட நிலையில், நடிகை குஷ்புவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று ரோந்து வாகனங்களும் அவர் வசிக்கக்கூடிய பகுதியைச் சுற்றி தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பட்டியலின மக்களை இழிவாக பேசியதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பில், தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வாசலில் குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website