கூலி வேலை செய்து படிக்கவைத்த பெற்றோர்; ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று சாதித்த இளைஞர்..!

May 10, 2022 at 11:11 am
pc

சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த சரவணன் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தனது பெற்றோருக்கும், தான் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.இவரின் பெற்றோர் ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த மைலம்பாடி, காட்டூர் காலனியை சேர்ந்த செல்வம், பாப்பாள்.

தாய்மொழியில் கல்வி கற்போர்க்கு நல்ல புரிதல் கிடைப்பதால் வெற்றி இலக்கை எளிதில் அடைந்துவிடலாம் என்பதை நிரூபித்துள்ளார் தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள சரவணன்.

தனது சாதனை பற்றி கூறுகையில்,என்னுடைய சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தை அடுத்த மயிலம்பாடி கிராமம்.நான் தாழ்த்தப்பட்ட (ST) சமூகத்தை சேர்ந்தவன், என்னுடைய பெற்றோர் கூலித் தொழிலாளர்கள்.

ஆனால் ஏழ்மையும் வறுமையும் என்றுமே வெற்றிக்குத் தடையில்லை, கல்வியால் அதை சாத்தியமாக்கிக் கொள்ளலாம் என்பதில் நான் சிறு வயது முதலே அசையா நம்பிக்கை வைத்திருந்தேன்.

தொடக்கநிலை முதல் 10ம் வகுப்பு வரை எங்கள் ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி கற்றேன்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதால் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி, எனக்கு 11 மற்றும் 12ம் வகுப்பு கல்வியை இலவசமாக வழங்கியது.

அதிலும் முதல் மதிப்பெண் பெற்று உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் மனஉளைச்சலோடு வீட்டில் முடங்கிக் கிடந்த போது அப்போதைய தமிழக முதல்வர் கல்லூரியில் இலவசமாகக் கல்வி கற்பதற்கான சலுகையையும், நிதிஉதவியையும் வழங்கினார்.

அரசின் உதவி கிடைத்ததால் நான் சென்னை எம்.ஐ.டி. கல்லூரியில் ஏரோநாட்டிகல் என்ஜினியரிங் படித்தேன்.

ஏரோநாட்டிகல் பிரிவை நான் தேர்ந்தெடுக்க எனக்கு முன்உதாரணமாக இருந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள்.

பொறியியல் பட்டம் பெற்ற பின் இரண்டு ஆண்டுகள் பெங்களுரில் டிசிஎஸ் நிறுவனத்தில் மாதம் ரூ. 50 ஆயிரம் சம்பளத்தில் பணியில் சேர்ந்தேன்.

இருந்த போதும் ஐஏஎஸ் கனவு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.

அன்றாட பிழைப்பிற்கே எங்கள் குடும்பம் கஷ்டப்படும் நிலையில் ஐஏஎஸ் தேர்விற்கு தயாராவதற்கான செலவுகளை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் அப்போது அந்தப் பணி எனக்குத் தேவைப்பட்டது.

2 ஆண்டுகளுக்குப் பின்னர் என்னுடைய சகோதரி மகேஷ்வரியும் அவருடைய கணவரும் இணைந்து என்னை வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஐஏஎஸ் தேர்விற்கு தயாராகும்படி வலியுறுத்தினர்.

என்னால் முடியும் என்று அவர்கள் எனக்கு தூண்டுகோலாக இருந்தனர்.

எங்கள் குடும்பத்தின் ஏழ்மைச் சூழ்நிலையில் நல்ல வருமானம் வரும் ஒரு பணியை விடுவதற்கு பெற்றோர் என்ன சொல்வார்களோ என்று தயங்கினேன்.

ஆனால் என்னுடைய அப்பா ‘உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் வேலையை விட்டுவிட்டு பரீட்சைக்கு நீ தயாராகு’ என்று ஊக்கமளித்தார்.

சென்னையில் மனிதநேயம் அறக்கட்டளை மற்றும் T.I.M.E கல்வி நிலையத்தில் இணைந்து ஐ.ஏ.எஸ் பணிக்கான தேர்வை 2014ம் ஆண்டு எழுதினேன்.

தேர்வு எழுதிய, 1,300 பேரில், 995 ரேங்க் பெற்று உள்ளேன். ஆங்கிலத்தில் படித்து தமிழில் மொழிபெயர்ந்து, முதல் முறையாகவே நான் தேர்ச்சி பெற்றேன்.

கிராமப்புற மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள், தமிழ் வழி படிப்பவர்களுக்கு தற்போது பல சவால்கள் உள்ளது.

அதையும் தாண்டி தன்னம்பிக்கையுடனும், விட முயற்சியுடனும் செயல்பட்டால், ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவது உறுதி.

நான் மக்கள் பணத்தில் படித்தேன் அதனால் மக்கள் தலைவனாகி அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது சிறு வயதிலேயே என்னுள் எழுந்த தீப்பொறி.

தன்னுடைய பெற்றோருக்கும், சமூகத்தினருக்கும் இன்னும் ஐ.ஏ.எஸ் என்றால் என்ன என்றே தெரியாது கலெக்டர் என்றால் தான் தெரியும்.

அப்படிப்பட்ட எங்கள் சமூகத்தின் புதிய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அவர்களுக்கு தான் ஒரு முன்உதாரணமாக அமைந்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன் என கூறுகிறார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website