சிரஞ்சீவி முதல் நானி வரை: சமந்தாவுக்கு ஆதரவாக பதிந்த கருத்துகள்

ஹைதராபாத்: சமந்தா – நாகசைதன்யா விவாகரத்துக்கு அரசியல் தலையீடுகளே காரணம் என்று கூறிய தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில், சமந்தாவுக்கு ஆதரவாக அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
சிரஞ்சீவி: “மரியாதைக்குரிய அமைச்சரின் இழிவான வார்த்தைகள் என்னை வேதனைப்படுத்தியது. தொடர்பில்லாதவர்களை இழுத்து அருவருப்பான கற்பனையான குற்றச்சாட்டுகளை சுமத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளில் யாரும் ஈடுபட வேண்டாம். சம்பந்தப்பட்டவர் தன்னுடைய வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும்.”
ஜூனியர் என்டிஆர்: “கொண்டா சுரேகா அவர்களே, தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுடன் கலப்பது மோசமானது. உங்களைப்போன்ற பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசும்போது கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். திரையுலகில் ஆதாரமற்ற கருத்துகளை போகிற போக்கில் பேசுவது வருத்தமளிக்கிறது. திரையுலகத்துக்கு எதிராக ஆதாரமற்ற கருத்துகளை பேசும்போது நாங்கள் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம். ஜனநாயக இந்தியாவில் இப்படியான பொறுப்பற்ற பேச்சுகளை சமூகம் இயல்பாக்கம் செய்யாது என்பதை உறுதி செய்வோம்.”
நடிகர் நானி: “எந்த முட்டாள்தனத்தையும் பேசிவிட்டு சென்றுவிடலாம் என நினைக்கும் அரசியல்வாதிகளை பார்த்தாலே அருவருப்பாக உள்ளது. உங்களின் வார்த்தைகளே பொறுப்பில்லாமல் இருக்கும்போது, நீங்கள் மக்களுக்காக பொறுப்புடன் செயல்படுவீர்கள் என்று நம்புவதே முட்டாள்தனம். இப்படியான மோசமான செயலை அனைவரும் சேர்ந்து கண்டிக்க வேண்டும்.”
நடிகர் மகேஷ் பாபு: “சக திரைத்துறையினர் குறித்து அமைச்சர் பேசிய வார்த்தைகள் வருத்தமளிக்கிறது. அப்பாவாக, கணவராக, தாய்க்கு மகனாக ஒரு பெண் அமைச்சர், மற்றொரு பெண் குறித்து இப்படிய பேசியிருப்பது வேதனையளிக்கிறது. மற்றவர்களை புண்படுத்தாத வகையில் பேச்சு சுதந்திரம் இருக்க வேண்டும். அமைச்சரின் இந்தப் பேச்சை நான் கண்டிக்கிறேன்.”
நடிகர் அல்லு அர்ஜுன்“திரையுலகைச் சேர்ந்தவர் மீதான ஆதாரமற்ற இழிவான குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கிறேன். குறிப்பாக பெண்கள் குறித்து பேசும்போது சம்பந்தப்பட்டவர்கள் கண்ணியத்தை கடைபிடிக்கவும். ஒட்டுமொத்த சமூகமாக நாம் மரியாதையையும், கண்ணியத்தையும் வளர்க்க வேண்டும்.”
அமைச்சர் சுரேகா பேசியது என்ன? – தெலங்கானா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா கூறும்போது, “நடிகை சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவ் தான் காரணம். அவர் அமைச்சராக இருந்தபோது, நடிகைகளின் போன்களை ஒட்டுக்கேட்பது, பின் அவர்களின் பலவீனங்களை அறிந்து மிரட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அவர் நடிகைகளை போதைக்கு அடிமையாக்கி இப்படியெல்லாம் செய்து வந்தார். இது சமந்தா, நாக சைதன்யா அவரது குடும்பம் என எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்” என பேசியிருந்தார். இதற்கு சமந்தா, நாகர்ஜுனா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
சொன்னதை திரும்ப பெற்ற அமைச்சர்: தெலுங்கு திரையுலகில் கண்டனங்கள் வலுத்த நிலையில், தான் கூறிய கருத்துகளை திரும்ப பெறுவதாக அமைச்சர் சுரேகா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “பெண்களை ஓர் அரசியல் தலைவர் எப்படி சிறுமைப்படுத்தினார் என்று தான் சொல்ல வந்தேன். சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்துவது என் நோக்கமல்ல. எனது கருத்தால் சமந்தாவோ, அவரது ரசிகர்களோ புண்பட்டிருந்தால் நான் சொன்னதை நிபந்தனையின்றி திரும்ப பெறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.