சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் டாப்ஸி!

August 21, 2022 at 8:13 pm
pc

இறந்து பல வருடங்கள் கடந்தாலும் சில்க் ஸ்மிதாவின் நினைவுகள் மட்டும் ரசிகர்கள் மனதில் இருந்து இன்னும் நீங்கவில்லை. அந்த அளவுக்கு இந்திய திரையுலகில் அசைக்க முடியாத ஒரு இடத்தை அவர் பெற்றுள்ளார். முன்னணி ஹீரோயின்களுக்கு இணையான அந்தஸ்துடன் வலம் வந்த ஒரே கவர்ச்சி நடிகையும் இவர்தான்.

இப்படி புகழின் உச்சியில் இருக்கும் போதே தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட இவரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாமல் மொத்த திரையுலகிற்கும் பேரிழப்பாக இருக்கிறது. அந்த வகையில் இவருடைய மரணத்திற்கு இதுதான் காரணம் என்று கூறப்பட்டாலும் பல விஷயங்கள் இன்றளவும் மர்மமாகவே இருந்து வருகிறது.

இதனாலேயே இவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். அந்த வரிசையில் சில்க்கின் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமாக வெளிவந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பிரபல நடிகை வித்யா பாலன், சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்தார்.

மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் பெற்றார். அதன் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

ஏனென்றால் சில்க்கின் வாழ்வில் நடந்த சில முக்கியமான பக்கங்கள் முதல் பாகத்தில் தெளிவாக காட்டப்படவில்லை. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. முதல் பாகத்தை தயாரித்திருந்த ஏக்தா கபூர் இந்த படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.

ஆனால் இப்படத்தில் வித்யா பாலன் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததால் தற்போது டாப்ஸி அந்த கேரக்டரில் நடித்த சம்மதித்திருக்கிறார்.

தமிழில் தனுஷின் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பல்வேறு சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் டாப்ஸி தற்போது சில்க்கின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website