சீர்திருத்தப் பள்ளியிலும் சிறுவர்கள் அடித்துக் கொல்லப்படுவது கொடுங்கோன்மை-சீமான் ஆவேசம்

January 20, 2023 at 6:35 pm
pc

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொல்லப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான காவலர்களுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் அங்கிருந்த காவலர்களால் அடித்துச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்நிலையத்தில் கைதிகள் கொல்லப்படுவது வழக்கமாகிவிட்டதைத் தொடர்ந்து, தற்போது சீர்திருத்தப் பள்ளியிலும் சிறுவர்கள் அடித்துக் கொல்லப்படுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

தாம்பரம் – கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்த தந்தையை இழந்த 17 வயது சிறுவன் கோகுல்ஸ்ரீ, தாயுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 29.12.2022 அன்று தாம்பரம் ரயில் நிலைய காவலர்கள் சந்தேகத்தின் பெயரில் சிறுவனைப் பிடித்து விசாரணைக்காக செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 31ம் தேதி சிறுவன் கோகுல்ஸ்ரீக்கு வலிப்பு ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சிறுவனின் தாயார் பிரியாவிற்கு அலைபேசியில் தெரிவித்த சீர்திருத்தப்பள்ளி நிர்வாகம், அடுத்த சில நிமிடங்களில் சிறுவன் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறுவனின் தாயாருக்கு இறந்த மகனின் உடலை பார்க்கக்கூட அனுமதி மறுத்து, வீட்டில் அடைத்து வைத்ததோடு, வெற்றுத்தாளில் கையெழுத்து கேட்டு மிரட்டிய கொடுமைகளும் அரங்கேறியுள்ள நிகழ்வுகள் நாம் சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இதற்கு பெயர்தான் சமநீதி காக்கும் திமுகவின் திராவிட மாடல் அரசா? என்ற கேள்வியும் எழுகிறது.

உயிரிழந்த சிறுவன் கோகுல்ஸ்ரீயின் உடலில் பல இடங்களில் அடித்துத் துன்புறுத்தப்பட்ட கடுமையான காயங்கள் இருந்துள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் இருமுறை நடைபெற்ற உடற்கூராய்வின் அறிக்கைகளும், சிறுவன் கோகுல்ஸ்ரீ காவலர்களால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது வேறுவழியின்றி சிறுவன் கோகுல்ஸ்ரீ மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்துள்ள காவல்துறை, செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளி கண்காணிப்பாளர் மோகன், துணை கண்காணிப்பாளர் நித்தியானந்தம் மற்றும் காவலர்கள் சந்திரபாபு, சரண்ராஜ், ஆனந்தராஜ், விஜயகுமார் ஆகிய ஆறு பேரைக் கைது செய்துள்ளது. இருப்பினும் விசாரணையில் காவல்துறையின் தலையீடு இருப்பதால் குற்றவாளிகளைத் தப்புவிக்க முயற்சிகள் நடைபெறுவதாக சிறுவனின் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 20 மாதங்களில் 20க்கும் 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 20 மாதங்களில் 20க்கும் 

மேற்பட்டவர்கள் சிறை மற்றும் காவல் நிலையங்களில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு காவல்துறை இயக்குநரே விசாரணையின்போது கைதிகள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டுமென்று சுற்றறிக்கை அனுப்பிய பிறகும் காவல்நிலைய மரணங்கள் இன்றுவரை குறைந்தபாடில்லை. தற்போது அதன் உச்சமாகச் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனும் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பது திமுக அரசின் அதிகார கொடுங்கரங்களின் அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும், அதனை தடுக்கக் திறனற்ற நிர்வாகத் தோல்வியையுமே வெளிக்காட்டுகிறது.

ஆகவே, கொல்லப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீயின் மரணத்திற்கான நேர்மையான நீதி விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டுமென தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன். மேலும், காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இனியும் இதுபோன்ற விசாரணை மரணங்கள் நடைபெறாமலிருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உயிரிழந்த சிறுவன் கோகுல்ஸ்ரீயின் குடும்பத்திற்குத் துயர் துடைப்பு நிதியாக ரூபாய் ஐம்பது லட்சம் வழங்க வேண்டுமெனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website