செம்பி திரைவிமர்சனம்;மக்கள் பாராட்டு..வேற லெவல் செம்பி!!

December 30, 2022 at 8:18 pm
pc

பிரபு சாலமன் இயக்கத்தில் முதல் முறையாக கோவை சரளா நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் செம்பி. அஸ்வின் குமார், தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத் என ஒரு பட்டாளமே நடித்துள்ளது. மைனா, கும்கி, கயல் படங்களுக்கு பிறகு சொல்லிஅடிப்பது போன்ற வெற்றியை பிரபு சாலமன் தரவில்லை. ஆனால், செம்பி அப்படங்களுக்கு நிகரான வெற்றியை கண்டிப்பாக தேடி தரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அப்படி இயக்குனரின் மீது ரசிகர்கள் வைத்திருந்த நம்பிக்கையை செம்பி காப்பாற்றினாளா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்..

கதைக்களம்  

பழங்குடியின மக்களில் ஒருவரான மூதாட்டி கோவை சரளா தனது பேத்தியுடன் { செம்பி } புலியூர் – கொடைக்கானலில் வாழ்ந்து வருகிறார். மலையில் கிடைக்கும் தேன் உள்ளிட்ட பல பொருட்களை சேகரித்து, அதை சந்தையில் விற்று காசாக்கி வரும் கோவை சரளா, ஒரு முறை மலையின் கடினமான இடத்தில் இருந்து தேன் எடுக்கிறார்.

இதை தனது பேத்தியிடம் கொடுத்து சந்தையில் விற்று வரும்படி அனுப்புகிறார். சந்தைக்கு செல்லும் வழியில் 10 வயது சிறுமி செம்பியை, மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து விடுகிறார்கள். தனது பேத்தி செம்பி மலையின் ஒரு பகுதியில் அடிபட்டு கிடப்பதாக கோவை சரளாவிற்கு செய்தி வருகிறது.

விரைந்து செல்லும் கோவை சரளா தனது பேத்தியை உடனடியாக அங்கிருந்து தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார். மருத்துவமனையில் செம்பியை பரிசோதனை செய்த மருத்துவர், உங்கள் பேத்தியை சிலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் என்று கூறுகிறார். இதன்பின், மருத்துவமனையில் இருந்து காவல் துறைக்கு செய்தி செல்ல, உடனடியாக இந்த விஷயத்தை விசாரணை செய்ய காவல் துறையில் இருந்து இன்ஸ்பெக்டர் வருகிறார்.

இந்த விசாரணையில் 10 வயது சிறுமி செம்பியை பாலியல் வன்கொடுமை செய்தது எதிர்க்கட்சி தலைவரின் மகனும், அவனுடைய நண்பர்களும் என்று தெரிய வருகிறது. இதை தெரிந்துகொண்ட அந்த இன்ஸ்பெக்டர் செம்பிக்கு நீதியை தேடி தராமல், செம்பியை கற்பழித்தவர்களிடம் ரூ. 3 கோடி பேரம் பேசி இந்த கேஸை முடிக்க பார்க்கிறார். 

இந்த கேஸை முடிக்க வேண்டும் என்பதினால் கோவை சரளாவிடம் கையெழுத்து வாங்க அவருடைய வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் செல்கிறார். ஆனால், விஷயத்தை தெரிந்துகொண்ட கோவை சரளா, நான் கையெழுத்து போடமாட்டேன் என் பேத்திக்கு நடந்த அநியாயத்திற்கு நீதி வேண்டும் என்று கூற, இன்ஸ்பெக்டருக்கும் – கோவை சரளாவிற்கும் மோதல் ஏற்படுகிறது.

இந்த அடிதடியில் இன்ஸ்பெக்டரை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தனது பேத்தியுடன் தப்பித்துவிடுகிறார் கோவை சரளா. அப்போது செல்லும் வழியில் வரும் ‘அன்பு’ பேருந்தில் செம்பியுடன் ஏறும் கோவை சரளா அங்கு தான் அஸ்வினை சந்திக்கிறார். இவர்களின் சந்திப்புக்கு பின் நடந்தது என்ன? செம்பிக்கு நீதி கிடைத்ததா? அந்த மூன்று போரையும் சட்டம் தண்டித்ததா? என்பதே படத்தின் மீதி கதை. 

படத்தை பற்றிய அலசல்

மூதாட்டியாக நடித்துள்ள கோவை சரளா அந்த கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திவிட்டார். வழக்கம்போல் திரையில் தோன்றி தனது உடல்மொழியால் நகைச்சுவை செய்து நம்மை சிரிக்க வைக்கும் கோவை சரளா, செம்பி படத்தின் மூலம் சற்று சிந்திக்கவும் வைத்துள்ளார். தனது பேத்திக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் போராடிய விதத்தின் நடிப்பு மிரட்டுகிறது.

செம்பி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள குழந்தை நட்சத்திர நடிகை நிலாவிற்கு தனி பாராட்டு. பாலியல் வன்கொடுமையால் சிதைக்கப்படும் சிறுமிகளின் பிரதிபலிப்பாக திரையில் தெரிந்தார் நிலா. கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அஸ்வின் பல சர்ச்சைகளையும், விமர்சனங்களுக்கும் பின் ரசிகர்களின் கைதட்டல்களை சொந்தமாக்கியுள்ளார். வலுவான கதாபாத்திரம் காசுக்காக இல்லாமல் நீதிக்காக போராடும் வழக்கறிஞராக அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

பேருந்து கன்டெக்டராக வரும் தம்பி ராமையா வழக்கம் போல் இந்த கதாபாத்திரத்திலும் அருமையாக நடித்துள்ளார். மற்றபடி அரசியல் வாதி நாஞ்சில் சம்பத், இன்ஸ்பெக்டராக வரும் அசோக், ஞானசமந்தம், ஆண்ட்ருவ் மற்றும் பேருந்தில் பயணம் செய்த நடிகர், நடிகைகள் என அனைவரும் கதையோடு ஒன்றிப்போகின்றனர். இதுவே படத்திற்கு மிகப்பெரிய பலம்.

இயக்குனர் பிரபு சாலமன் எடுத்துக்கொண்ட கதைக்களம் தற்போதுள்ள நிலைமைக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது. சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என்று எடுத்து காட்டியுள்ளார் பிரபு சாலமன். சில தடுமாற்றாம் இருந்தாலும் திரைக்கதை Lag இல்லாமல் நகர்கிறது. சில லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும், அவை யாவும் கதையின் ஓட்டத்தை கெடுக்கவில்லை. மேலும் வசனம் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய வலிமை. மலையில் எடுக்கப்பட்ட பல காட்சிகளை அற்புதமாக இருந்தன. படத்தோடு ஒன்றிய பாடல்கள் கேட்க இனிமையான இருந்தது. அதற்காக இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னாவிற்கு பாராட்டு.

அதே போல் பின்னணி இசையும் சூப்பர். பேருந்தில் எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சிகள் பேருந்தை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தின் வடிவமைப்பு அற்புதம். முக்கியமாக எடிட்டிங் படத்தின் திரைக்கதையை ரசிக்க வைக்கிறது.   

பிளஸ் பாயிண்ட்

கதை, திரைக்கதை

பேருந்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் 

கோவை சரளா, செம்பியாக நடித்துள்ள நிலா, அஸ்வின் குமார் நடிப்பு

அற்புதமான ஒளிப்பதிவு

எடிட்டிங் 

மைனஸ் பாயிண்ட்

சில இடங்களில் ஏற்படும் லாஜிக் மிஸ்டேக் 

மொத்தத்தில் தடுமாற்றம் இருந்தாலும், சமூகத்திற்கு தேவையான விஷயத்தை கூறியிருக்கிறாள் இந்த செம்பி.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website