செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவில்: நித்தியானந்தாவின் அடுத்த அறிவிப்பு!

July 13, 2022 at 9:22 am
pc

பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார். இந்த நிலையில் நித்யானந்தா இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது.

இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா தரப்பில் இருந்து சில முகநூல் (பேஸ்புக்) பதிவுகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவில், குருபூர்ணிமா நாளான ஜுலை 13-ந் தேதி மீண்டும் நேரில் தோன்றி தரிசனம் அளிக்க உள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- நான், நாளை(13-ந் தேதி) இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறவிருக்கும் குரு பூர்ணிமா கொண்டாட்டத்திற்கு நேரடி சத்சங்கம் ஆற்றவும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கவும் இருக்கிறேன்.

சீடர்களின் பக்தர்களின் வாழ்வில் மட்டுமல்ல மானுட குலத்திற்கே மங்கலம் வழங்கப்போகும் இந்த குரு பூர்ணிமா தருணத்தில் நேரடியாக கைலாசத்தில் இருந்து பரமசிவன் அருளும் செய்தி இது. பரமசிவன் சக்திகளை வெளிப்படுத்துவது என்பது உயிரினங்களுக்கு புதிய இயல்பாக இருக்கும். உங்கள் மைய உணர்வானது உயிர்ப்பு உடையது, அதற்கு எந்த காலாவதி தேதியும் கிடையாது. காலாவதியாகும் எதுவும் உங்கள் மையம் அல்ல, அது தற்காலிகமாக உங்களில் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் அது ஒருபோதும் உங்களுக்கு மையமாக இருக்க முடியாது.

இந்த 3 மாத இடைநிறுத்த சமாதியானது (ஏப்ரல் 13-ந் தேதி முதல் – ஜூலை 13-ந்தேதி வரை) பிரபஞ்சத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய மற்றும் சிறந்த ஒரு நிகழ்வாகும். உங்கள் உயிர் இருப்பில் (சத்) பரமசிவத்துவம் முழுமையாக வெளிப்படுகிறது. மனிதகுலத்திற்காக நான் சுமக்கும் உயிர்ப்பின் சக்தி புனிதமானது. எனது நோக்கமும் பணியும் உயிர்ப்பும் இம்மனித குலத்திற்கு செய்யக்கூடிய பெரும் பங்களிப்பானது, உன்னதமானது. கைலாசத்தின் நோக்கம், பணி மற்றும் உயிர்ப்புக்கான எனது தூய அன்பு உன்னதமானது.

கைலாசத்தின் நோக்கம், பணி மற்றும் உயிர்ப்பை நிஜம் ஆக்குவதற்காக எதையும் தியாகம் செய்ய சித்தமாய் இருக்கும் எனது வலிமை உன்னதமானது. இவை அனைத்தும் பரம சிவாவிடமிருந்து நான் பெற்ற பெரிய பரிசுகள். பரமசிவமே இந்த உடம்பின் வழியாக வெளிப்பட்டு கொண்டிருக்கிறார், மேலும் மேலும் ஆழமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். பல நிலைகளில் ஆன்மீக ரசவாத செயல்முறை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த ரசவாத செயல்முறையின் மூலம் குறை சக்தியுடைய உலோகங்கள் உயர் சக்தியுடைய உலோகங்களாக மாற்றப்படுகின்றன. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்போது அங்கு பரமசிவ கோவிலையும் நிர்மாணிக்க கைலாசா நிர்வாகமானது, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றத்திற்காகப் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறது. இந்த மங்களகரமான குரு பூர்ணிமா நாளில் எனது குரு பரம்பரைக்கு என்னை அர்ப்பணித்து 42-வது சதுர்மாஸ்ய விரதத்தைத் தொடங்குகிறேன். வளப்படுத்தி மகிழுங்கள், பகிருங்கள், கொண்டாடுங்கள். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website