ஜெயலலிதா மரணத்திற்கான காரணம் என்ன? – எய்ம்ஸ் மருத்துவ குழுவின் அறிக்கை விவரம்!

August 21, 2022 at 12:51 pm
pc

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார். அதன் பின்னர், அவசர அவசரமாக ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனாலும், அவரால் 72 நாட்கள் அதாவது 2017 பிப்ரவரி 15-ம் தேதி வரை மட்டுமே அந்த பதவியில் இருக்க முடிந்தது. அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2017 பிப்ரவரி 16-ம் தேதி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார்.

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம்

முன்னதாக டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் அம்மா மரணத்தில் சந்தேகம் (ஜெயலலிதா மரணத்தில்) இருப்பதாக பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார். மேலும், முறையாக விசாரணை நடத்தினால் தான் பல உண்மைகள் வெளிவரும் என்றும் கூறினார். அதன் பின்னர், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017 செப்டம்பர் 25-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார். இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அப்போது உடன் இருந்தவர்கள், சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அப்போது முக்கிய பொறுப்பில் இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 157 பேரிடம் விசாரணை நடத்தியது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் எய்ம்ஸ் குழு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முறையான மருத்துவர் குழு இல்லை என அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவி செய்ய மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் கொண்ட எயம்ஸ் மருத்துவக் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த குழுவினர் அப்பலோ மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கைகள் அனைத்தையும் ஆய்வு செய்தனர்.

எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை

அதன் பின்னர் எய்ம்ஸ் மருத்துவ குழு ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்துள்ள முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன. “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே அவருக்கு காய்ச்சல் மற்றும் குடல் இயக்க பாதிப்பு இருந்துள்ளது. ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் செப்டம்பர் 19-ம் தேதி ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதனை செய்துள்ளார். செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆக்சிஜன் அளவு 48 சதவீதமும், இதயத்துடிப்பு 88, ரத்த அழுத்தம் 140/70, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிக அளவில் இருந்துள்ளது.

வெண்டிலேட்டருடன் சிகிச்சை

மூச்சுத்திணரல் இருந்ததால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்துள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இன்சுலின் கொடுக்கப்பட்டுள்ளது. சுவாசக்குழாயில் தொற்று இருதய துடிப்பை கட்டுப்படுத்த பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. செப்டம்பர் 28-ஆம் தேதி ஜெயலலிதா உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்பு உடல்நிலை சீரானது. இடையிடையே சில தினங்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்துள்ளது. அவ்வப்போது அவரது உடல்நிலை பாதிப்புக்கு ஏற்ப உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவுக்கு பேச்சு பயிற்சி அளிக்க மேற்கொண்ட முயற்சியும் பலனளித்துள்ளது.

டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு மரணம்

பாக்டீரியா பாதிப்பால் சுவாசக்குழாயில் தொற்று ஏற்பட்டதும் மருத்துவ ஆவணங்கள் மூலம் தெரிகிறது. நுரையீரல் பாதிப்பு ஜெயலலிதாவின் உடல்நிலையில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால், வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அன்றைய தினமே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சி.பி.ஆர்(Cardiopulmonary resuscitation) எனப்படும் இருதய பகுதியில் அழுத்தம் கொடுக்கும் சிகிச்சையை தொடர்ந்து எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 24 மணி நேரமும் எக்மோ சிகிச்சைக்கு ஜெயலலிதா உட்படுத்தப்பட்டார். ஆனாலும் டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு அவரது மூளை மற்றும் இதயம் செயலிழந்து உயிர் பிரிந்தது.

ஜெயலலிதா மரணத்திற்கான காரணம்

ஜெயலலிதாவுக்கு தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட சிகிச்சைகள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஜெயலலிதாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. இருதய செயலிழப்பு முடிவில், ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவையால் ஏற்பட்ட இருதய செயலிழப்பு தான் அவரது மரணத்துக்கு காரணம் என்பது தெளிவாக தெரிகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்பது மருத்துவ சிகிச்சை ஆவணங்கள் மூலம் தெரிகிறது. கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய் அப்பல்லோ 

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அவருக்கு சர்க்கரை நோய், தைராய்டு, மரபுவழி தோல் அழற்சி, குடல் நோய், அதிக ரத்த அழுத்தம், தலைசுற்றல், மூச்சுக்குழாய் அழற்சி, நரம்பு தளர்ச்சி போன்ற பல்வேறு நோய் பாதிப்புகள் இருந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கேக், திராட்சை சாப்பிட்ட ஜெயலலிதா

தோல் நோய்க்காக அவருக்கு ஸ்டீராய்டு எனப்படும் வலி நிவாரணி மருந்து கொடுக்கப்பட்டிருப்பது மருத்துவமனை ஆவணம் மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலத்தில் தெரிகிறது. சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, ஜெயலலிதாவுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்ததாகவும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக திராட்சை பழம், கேக், இனிப்பு ஆகியவற்றை சாப்பிட்டு வந்ததாகவும் ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் வாக்குமூலம் 

அளித்துள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மற்றும் ஆணையத்தின் விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் விரைவில் இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website