டிரம்பின் வழக்கு செலவு… ஆபாச பட நடிகைக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு!

April 5, 2023 at 12:37 pm
pc

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில், டிரம்பின் வழக்கு செலவுக்கு ரூ.9.86 கோடி வழங்க வேண்டும் என ஸ்டோர்மி டேனியல்சுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அமெரிக்காவில் 2021-ம் ஆண்டு ஜனவரி வரை முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் டொனால்டு டிரம்ப். தொழிலதிபரான இவர் 2016-ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, ஆபாச பட நடிகை ஒருவர் எழுப்பிய குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்படுத்தியது.

டொனால்டு டிரம்ப் மீது ஏற்கனவே 10-க்கும் கூடுதலான பெண்கள், பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். 

இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்புடனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016-ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தது. அதனால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது.

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், கடந்த காலத்தில் ஆபாசபட பிரபலம் ஸ்டோர்மி டேனியல்ஸுடன் நெருக்கமாக இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதிபர் தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியுடனான பழக்கம் வைரலான நிலையில், அது டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. 

இதனை தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆட்சி மாறியதும் டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது

அந்த கிரிமினல் வழக்கில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் விரைவில் சரண்டர் ஆக உள்ளதாக தகவல் வெளியானது. 

அவர் நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதால் நியூயார்க் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மன்ஹாட்டன் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன. நீதிமன்றத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன.

வி.ஐ.பி.க்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கும் வகையில், நீதிமன்றம் செல்லும் சாலைகளில் ஏராளமான ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்து, டிரம்ப் நேற்று மதியம் கோர்ட்டில் ஆஜராக திட்டமிட்டார். இதனை முன்னிட்டு கோர்ட்டில் அவரது வழக்கறிஞர்கள் கூறும்போது, வீடியோ பதிவு செய்வதோ, புகைப்படம் எடுப்பது மற்றும் ரேடியோ கவரேஜ் செய்வதோ கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஏற்கனவே சர்க்கஸ் கூடாரம் போன்று நிலைமை தலைகீழாக உள்ளது. இந்த வழக்கில், அது நிலைமையை இன்னும் மோசமடைய செய்ய கூடும் என வாதிட்டனர். இந்த சூழலில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் கைரேகை, புகைப்படம் ஆகியவை கோர்ட்டில் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் இந்த வழக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறினர். இந்த வழக்கின் விசாரணை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட்டில் நடந்தது. இதற்காக முன்னாள் அதிபர் டிரம்ப் நியூயார்க் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அங்கு அவர் சட்டமுறைப்படி கைது செய்யப்பட்டார். 

அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மேல்முறையீட்டுக்கான 9-வது சர்கியூட் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு ஒன்றில், டிரம்பின் சட்ட விசயங்களுக்காக வாதிட்ட வழக்கறிஞர்களுக்கு, செலவு தொகையாக ரூ.9.86 கோடிக்கும் கூடுதலான தொகையை வழங்க வேண்டும் என்று ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்சுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட்டில், டேனியல்சை அமைதிப்படுத்த பணம் கொடுத்தது உள்ளிட்ட 34 கிரிமினல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்கில் டிரம்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட அதே நாளில் இந்த உத்தரவும் வெளியானது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது என்பது இது முதல் முறையாகும்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website