தமிழகத்தில் ஹூண்டாய் நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு!

May 12, 2023 at 1:26 pm
pc

தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே தொழில் முதலீடு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 27 ஆண்டுகளாக இந்த நிறுவனம் கார் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 7 லட்சத்து 40 ஆயிரம் பெட்ரோல், டீசல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த உற்பத்தி திறனை ஆண்டுக்கு 8 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தவும், எலக்ட்ரிக் கார் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டது.

எலக்ட்ரிக் கார் உற்பத்தியை அதிகரிக்க ஆண்டுக்கு 1 லட்சத்து 78 ஆயிரம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை உற்பத்தி செய்ய முடிவு செய்தது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்வதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் முக்கிய நெடுஞ்சாலைகளில் 100 மின்னேற்ற நிலையங்களையும் (சார்ஜிங் ஸ்டேசன்) ஹூண்டாய் நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்காக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளில் மொத்தம் ரூ.20 ஆயிரம் கோடியை தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளது. 

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்ற விழா சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் அசோசியேட் துணைத்தலைவர் புனீத் ஆனந்த் வரவேற்றார். புரிந்துணர்வு ஒப்பந்தம் இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தலைமை செயல் அதிகாரி உன்சூ கிம், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணு ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டனர். 

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 1996-ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் அலகிற்கு கருணாநிதி அடிக்கல் நாட்டினார். 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 2-வது தொழிற்சாலையையும் கருணாநிதி 2008-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டிற்கும், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே உள்ள நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சியின் காரணமாக இந்த நிறுவனத்தினுடைய மொத்த முதலீடு சுமார் 23 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. 

தற்போது ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவிலேயே 2-வது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாகவும், கார் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்டோமொபைல் மற்றும் அதன் பாகங்கள் தயாரிப்பில், தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தை வகிக்கிறது. அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக, எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் தற்போது தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவாகி உள்ளது. இதற்கு, தமிழ்நாட்டில் உள்ள திறன் வாய்ந்த மனித வளம், உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு ஆகியவற்றுடன், தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் முக்கிய காரணங்களாக உள்ளன. 

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிற்கும், பிற உலக நாடுகளுக்கும் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்தலுக்கான தனது நெடுங்கால முதலீட்டு திட்டத்திற்கு, முதன்மை தளமாக தமிழ்நாட்டை தேர்வு செய்திருப்பது பெருமையாக உள்ளது. இந்நிறுவனம், இருங்காட்டுக்கோட்டையில் தற்போதுள்ள தொழிற்சாலையில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைக்கான மின்னூர்தி மையமாக மேம்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 

இந்நிறுவனம் 15 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலீடுகளை ஈர்த்து அதன்மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக முனைந்து செயல்படும் இந்த அரசின் முயற்சிகளுக்கு இது உறுதுணையாக உள்ளது. 

தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த தங்கம் தென்னரசு மற்றும் தொழில்துறை அதிகாரிகளும் இந்திய அளவில் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் சென்று முன்னணி தொழில் துறையினரை சந்தித்து பெரும் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளனர். அதற்காக, அவர்களை மனதார பாராட்டுகிறனே். 

தற்போது தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா, மிகவும் முனைப்புடன் செயல்பட்டு, அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என நம்புகிறேன். ஆதரவு தொடரும் நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாறினாலும், தமிழ்நாடு அரசு, தொழில் துறையினருக்கு அளித்துவரக்கூடிய ஆதரவும், தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் என்றும் தொடரும். 

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (கார்ப்பரேட் விவகாரங்கள்) டி.எஸ்.கிம், துணை தலைவர் (நிதி) சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website