தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், டிச 2 -ம் திகதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஆரஞ்சு அலர்ட்
இந்நிலையில் மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.