தமிழக முதலமைச்சர் பாவயாத்திரை செய்து பாவங்களை போக்க வேண்டும்! அண்ணாமலை தாக்கு

July 29, 2023 at 8:15 pm
pc

தமிழக முதலமைச்சர் பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி, சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாத யாத்திரையை விமர்சித்து முதலமைச்சர் பேச்சு

இந்திய மாநிலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து பேசினார்.

அப்போது அவர்,”அமித் ஷா நேற்று தமிழகத்திற்கு வந்தார். அவர் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க வரவில்லை. ஏதோ பாத யாத்திரையை தொடங்கி வைக்க வந்துள்ளார். அது பாத யாத்திரை அல்ல, பாவ யாத்திரை. 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த சம்பவத்திற்கும், தற்போது மணிப்பூரில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க நடத்தும் பாவ யாத்திரை” என்று அண்ணாமலையின் பாதயாத்திரையை விமர்சித்து பேசியிருந்தார்.

முதலமைச்சரை விமர்சித்து அண்ணாமலை ட்வீட்

இந்நிலையில், தமிழகத்தின் முதலமைச்சரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலை தனது ட்வீட்டில்,”தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாவயாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், திமுக முதல் குடும்பத்தின் ‘நிதி’களைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது.

தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால் அது திமுகவின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது.

மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர், திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி மௌனப் பார்வையாளர்களாகவே இருந்தனர். மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவைப் பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன.

2009 ஆம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழக முதலமைச்சர், தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார்.

பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் மு.க.ஸ்டாலின் பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என விமர்சித்து கூறியுள்ளார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website