தற்கொலை எண்ணிக்கையில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம்!

August 30, 2022 at 7:54 am
pc

கடந்த ஆண்டு, நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்த தற்கொலைகள் அடிப்படையில், ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவண பிரிவு பதிவு செய்துள்ள தகவல்கள் அடிப்படையில், இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 தற்கொலைகள் பதிவாகி உள்ளன. இது முந்தைய ஆண்டை விட 7.2 சதவீதம் அதிகம். இதில், அதிக தற்கொலைகள் அடிப்படையில் மராட்டிய மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.

அங்கு 22 ஆயிரத்து 207 தற்கொலைகள் நடந்தன. மொத்த தற்கொலையில் இது 13.5 சதவீதம். அதையடுத்து, 18 ஆயிரத்து 925 தற்கொலைகளுடன் தமிழ்நாட்டிற்கு 2-வது இடத்தில் உள்ளது. மொத்த தற்கொலையில் இது 11.5 சதவீதம் ஆகும். மத்தியபிரதேசம் (14 ஆயிரத்து 965 தற்கொலைகள்), மேற்கு வங்காளம் (13 ஆயிரத்து 500), கர்நாடகா (13 ஆயிரத்து 56) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. 

மேற்கண்ட 5 மாநிலங்களில் மட்டும் 50.4 சதவீத தற்கொலைகள் நடந்துள்ளன. அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரபிரதேசத்தில் வெறும் 3.6 சதவீத தற்கொலைகள்தான் நிகழ்ந்துள்ளன. யூனியன் பிரதேசங்களில் டெல்லி முதலிடத்தையும், புதுச்சேரி 2-வது இடத்தையும் பிடித்துள்ளன. 53 பெருநகரங்களில் மட்டும் மொத்தம் 25 ஆயிரத்து 891 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. 

தொழில், பணி தொடர்பான பிரச்சினைகள், தனிமை உணர்வு, வன்முறை, குடும்ப பிரச்சினைகள், மனநல பிரச்சினைகள், மதுவுக்கு அடிமை ஆகுதல், நிதி இழப்பு, நீண்டநாள் வலி ஆகியவை தற்கொலைக்கான முக்கிய காரணங்கள் என்று தேசிய குற்ற ஆவண பிரிவு கூறியுள்ளது. இதுபோல், கடந்த ஆண்டில் நடந்த போக்குவரத்து விபத்துகளும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, நாடு முழுவதும் 4 லட்சத்து 22 ஆயிரத்து 659 போக்குவரத்து விபத்துகள் நடந்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட (3 லட்சத்து 68 ஆயிரம்) அதிகம். இந்த விபத்துகள் மூலம், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 24 ஆயிரத்து 711 பேர் மரணம் அடைந்துள்ளனர். 16 ஆயிரத்து 685 மரணங்களுடன் தமிழ்நாடு 2-ம் இடத்தை பிடித்துள்ளது. இது மொத்த மரணங்களில் 9.6 சதவீதம் ஆகும். 3-வது இடத்தில் மராட்டியம் உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website